கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்

156

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பிரிக்க முடியாத உணவு என்பதை பழந்தமிழர் இலக்கியங்களிலிருந்து அறியலாம். உடல் வலியுடன் வேலை செய்யும் கிராம மக்கள், கள்ளை வலி நிவாரணியாக நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியாக மக்களுக்கு கள் ஏற்ற பானமும் ஆகும்.கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவது மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47 சொல்கிறது.

கேரளாவில் மது கொள்கை மற்றும் மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் தனது அறிக்கையில், “கள்  மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ மது விலக்குச் சட்ட்த்தின் படி தமிழக அரசு கள்ளைத் தடை செய்துள்ளது. இதன் முலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உணவு தேடும் உரிமையைத் தமிழக அரசு பறிக்கிறது என அறிந்து கொள்ளலாம். ஆகையால் திட்டமிட்டே நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிஷனின், கள் குறித்த அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது.இது மிகவும் அநீதியான செயலாகும்.

1927 இல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 1963 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்திருக்கிறார்.பெரியாரின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்வோரும், கள் மது என்று கூறி மது ஒழிப்பு மாநாடு நடத்துவோரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளுக்கு தடை என்றால் அரசு விற்பனை செய்யும் பீர், பிராந்தி போன்றவை புனித நீரா?மக்கள் இறக்கும் கள்ளுக்கு தடை விதிக்கும் அரசாங்கம், தானே மதுவை தெருத் தெருவாக விற்பனை செய்கிறது.அரசின் வருமானத்தைத் தாண்டி, பண முதலைகள் மற்றும் தங்கள் பினாமிகளின் வருமானம் பாதிக்கப் படக்கூடாது என்பது தானே முக்கிய நோக்கம்.வருமானத்திற்காக உடலைக் கெடுக்கும் மது வகைகளுக்கு பருவந் தோறும் இலக்கு வைத்து வணிகம் நடத்தும் தமிழக அரசு,மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

மாடு வைத்துள்ளவர்கள் பாலைக் கறந்து விற்பது மாதிரி பனை மரம் வைத்திருப்பவர்கள் எந்த லைசென்ஸூம் இல்லாமல் கள் விற்கலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி ஈரோடு அரச்சலூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி,
சீமான்

நாம் தமிழர் கட்சி

.

முந்தைய செய்திஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்