அமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர் – சீமான்

18

அமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர்

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதுவர் பொறுப்பிலிருந்து, இந்தியாவின் பெருமிதமாகவே கருதப்படும்  மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர்  அறிவித்ததே இதற்குக் காரணம் என்பதால், அந்த உயர்ந்த மனிதரை நாம் தமிழர் கட்சி வாழ்த்தி வணங்குகிறது.

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தயவில் அந்த விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டாம் – என்று மும்பை நகர நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். சிங்கள அரசின் இனவெறி அமிதாபின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்தகணமே, கொழும்பில் நடந்த அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொறுப்புடன் அறிவித்தார் அமிதாப். அமிதாபே அப்படி அறிவித்துவிட, பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி கொழும்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்க நேர்ந்தது. திரைப்பட நட்சத்திரங்களைக் காட்டி, தன் கைகளில் இருந்த ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராஜபட்சேவின் முகத்தில் கரிபூசப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டத்தில் ஒரு துக்கவிழா போல் நடந்து முடிந்தது, கொழும்பில் நடந்த அந்த விழா.

தமிழ் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அதைப் புரிந்துகொண்டு, ‘இலங்கைக்குப் போகமாட்டேன்’ – என்று ஆண்மையோடு அறிவித்ததன் மூலம், தான் ஒரு உண்மையான கதாநாயகன் என்பதை நிரூபித்தார் அமிதாப். தமிழரல்ல என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளித்ததன் மூலம், தான் உண்மையான மனிதர் என்பதையும் நிரூபித்தார்.

சில நட்சத்திரங்களைப் போல், சமூக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடாமல், துணிவாக முடிவெடுத்ததன் விளைவாகத்தான், ஆண்டுதோறும் நடக்கும் அந்த விழாவின் கௌரவப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதன் மூலம் மதிப்பிழந்து போனது அந்த விழா தானே தவிர, அமிதாப் என்கிற மகத்தான மனிதரல்ல.

சினிமா நட்சத்திரங்களை வைத்து காட்சி நடத்தும் ஒரு குட்டி அமைப்பு, அமிதாபைத் தூக்கியெறியலாம். ஆனால் உலகெங்கும் வாழும் சுமார் 10 கோடி தமிழர்கள், அவரைத் தங்கள் இதயத்தில் ஏந்தியிருக்கிறார்கள்.

முந்தைய செய்திராஜபட்சேவை அடித்து விரட்டும் புலம்பெயர் சொந்தங்களுக்கு நன்றி.. நன்றி! – சீமான்
அடுத்த செய்திதமிழக தமிழர்களின் உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்- வழக்கறிஞர் கயல்விழி