இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.

13

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயலாளர் பான் கி மூன்.

இலங்கையில் நடந்த கடைசிக்கட்டப் போரின்போது பெருமளவில் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அரசு மற்றும் ராணுவத்தின் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வுக்குப் புகார்கள் குவிந்தன.இதுகுறித்து ஆரம்பத்தில் பான் கி மூன் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் இலங்கை ராணுவத்தின் கொடூரமுகம் குறித்த ஒரு வீடியோ காட்சி வெளியானதைத் தொடர்ந்து ஐ.நா.வுக்கு நெருக்குதல் அதிகரித்தது. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை பான் கி மூன் அறிவித்தார்.

இந்தக் குழு டிசம்பர் 15ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்க முதலில் கால அவகாசம் தரப்பட்டிருந்தது. இருப்பினும் விசாரணை முடிவடையாத நிலையில் தற்போது காலஅவகாசம் டிசம்பர் மாதக் கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நிபுணர் குழு உறுப்பினர்கள் இதுவரை இலங்கைக்குப் போகவே முடியவில்லை. காரணம், இலங்கை அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் இலங்கைக்கு அவர்கள் வரலாம் என கொழும்பு சம்மதம் தெரிவித்தது.இந்த நிலையில்தான் தற்போது குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளரான பர்ஹான் ஹக் கூறுகையில், குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்களது திட்டப்படி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். எப்போது அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை என்று  ஹக் தெரிவித்துள்ளார்.