
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
Senthamizhan Seeman,
Chief Coordinator,
Naam Thamizhar Katchi
https://twitter.com/SeemanOfficial
இன்றைய தமிழக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை. தமிழர் தந்தை ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்கள் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார்.
வாழ்க்கை வரலாறு
சீமான் அவர்கள் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள, இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
திரைத்துறை வாழ்க்கை
கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைபடுத்தப்பட்டார். நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி மேலும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மே 10, 2010 அன்று நாம் தமிழர் இயக்கத்தை சீமான் அவர்கள் அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், முல்லைப் பெரியாறு மற்றும் காவிரியில் நதிநீர் உரிமையை மறுத்து தமிழத்திற்கு தண்ணீர் தர மறுத்த கேரளா, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத வருவதை எதிர்த்தும், தாமிரபரணி நீரை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், நெடுவாசல் – கதிராமங்கலம் போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் மண்ணை நஞ்சாக்கும் திட்டங்களுக்காக மக்களை ஒடுக்கும் அரசைக் கண்டித்தும், சல்லிகட்டு தடைக்கு எதிராகவும், மாட்டிறைச்சி தடையை எதிர்த்தும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தும், GST சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்தும், மருத்துவப் படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு NEET எதிர்த்தும், மியான்மரில் ரோகிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், சாதியப் படுகொலைகளைக் கண்டித்தும், கல்விக்கடன் தொல்லையால் மாணவர்கள் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் , திருவள்ளுவர் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், CAA, EIA, NEP, புதிய வேளாண் சட்டங்கள் போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து பரப்புரை மேற்கொண்டார். சீமான் அவர்களின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது. கடலூர் தொகுதியில் சீமான் அவர்கள் போட்டியிட்டார். தேசிய-திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தனித்தன்மையுடன் போட்டியிட்டு இத்தேர்தலில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியல் களத்தில் ஆழமான தடத்தைப் பதித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் – 2019
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 23.03.2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் நீலகிரி மக்களவை தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது.
22 தொகுதி இடைத்தேர்தல் – 2019
18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் தலைமையில் தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் 2021:
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போன்று இந்த சட்டமன்றத் தேர்தலிலும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மகளிருக்கு சரிபாதி வாய்ப்பு வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் பொது சின்னமாக விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சீமான் தலைமையின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி:
| வருடம் | தேர்தல் | பெற்ற வாக்குகள் | விழுக்காடு % |
|---|---|---|---|
| 2016 | சட்டமன்ற தேர்தல் | 458104 | 1.1% |
| 2017 | ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல் | 3802 | 2.15% |
| 2019 | 22 தொகுதி இடைத்தேர்தல் | ||
| தமிழகம் | 138419 | 3.15% | |
| புதுச்சேரி | 1084 | 4.72% | |
| மொத்த வாக்குகள் | 139503 | ||
| 2019 | நாடாளுமன்ற தேர்தல் | ||
| தமிழகம் | 1645185 | 3.89% | |
| புதுச்சேரி | 22857 | 2.89% | |
| வேலூர் | 26995 | 2.63% | |
| மொத்த வாக்குகள் | 1695037 |
தைப்புரட்சியில் சீமானின் பங்கு
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.
27 டிசம்பர் 2016 ஜல்லிக்கட்டுக்காக நாம் தமிழர் கட்சி சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.