வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

71

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25-12-17) காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அப்போது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுச்சுடரேற்றி மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், உலகிலுள்ளப் பேரறிஞர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமென எண்ணினார்களோ அப்படி பெண்ணுக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவள் எங்கள் பெரும்பாட்டி வேலுநாச்சியார். அவர் ஆண்களுக்கு நிகராகப் போர்க்களத்தில் வீரச்சமர்புரிந்த மானமறத்தியாவார். இழந்த நிலத்தை மீட்டப் பெருமை தமிழர் இன வரலாற்றில் எங்களது பாட்டி வேலுநாச்சியாருக்கும், அவளது பேரன் எங்கள் தலைவன் பிரபாகரனுக்கும்தான் உண்டு. அவரது நினைவைப் போற்றுகிறபோது தமிழ்ப்பேரினம் பெருமை கொள்கிறது. இந்தத் தலைமுறைப்பிள்ளைகள் பெருமிதத்தோடும், திமிரோடும் அவருக்கு எங்களது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

எங்களது உழைப்புக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். எவ்வளவு இழிவாக இந்நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இந்த நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மக்களுக்குக் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கும் வரையில் வெற்றி பெறுகிறவர், சேவை செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார். பணம்தான் பிரதானம் என்றால், நேர்மையான நிர்வாகம், சேவை மனப்பான்மை என்பதையெல்லாம் மக்கள் எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இந்தக் கட்சிகள் எல்லாம், ‘காசு கொடுத்தால் போதும்’ என்கிற மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள். இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகளாக செய்து வரும் சாதனை. மக்களும் தங்களுடைய உரிமையை விற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். வாக்கை விற்பது என்பது மானத்தை விற்பது போன்றது என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வளவு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு, பணம் எப்படி வந்தது என்பதை யோசிக்கும்போதுதான் நல்ல சிந்தனை பிறக்கும். பணம் பெறுகிறவரையில் மக்களிடமும் நேர்மை இருக்காது. ஆள்பவர்களிடமும் நேர்மை இருக்காது. இது ஒரு குற்ற சமூகமாகத்தான் மாறிப் போகும்.

தினகரன் வெற்றிக்கு ஒரே காரணம், பணம் மட்டும்தான். பணத்தைப் பிரதானமாக வைத்துக் கட்டமைக்கிற ஒரு சமூகம், எப்படி சரியான சமூகமாக இருக்கும். ஒரு முதலீட்டாளன் லாபத்தைப் பெறுவதற்கு வருவாரா? மக்கள் சேவைக்காக வருவாரா? 100 கோடி, 200 கோடி என செலவிட்டு வெற்றியைப் பெறுகிறவர், எப்படி சேவை செய்வார்? பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினராகி மக்களுக்குச் சேவை செய்யும் அளவுக்கு இவர்கள் நல்லவர்களா? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று அம்மையார் தமிழிசை தெருவில் இறங்கிப் போராடுகிறார். இவர்கள்தானே கறுப்புப்பணத்தை ஒழித்துவிட்டோம் என்றார்கள். இப்போது வாக்குப்பணம் கொடுக்க பணம் எப்படி வந்தது? கேஸ்லெஸ் எகானமி என அறிவித்த பிறகும், முழுக்க 2 ஆயிரம் ரூபாய் தாள்களாக தொகுதியில் விளையாடியது எப்படி? சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. பணம்தான் பிரதானம் என்றால் இது முதலாளிகளின் வேட்டைக்காடாகத்தான் இருக்கும். மக்கள் வாழ்கிற நாடாக இது இருக்காது. இது நாட்டை நாசமாக்கிவிடும்.

தினகரன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். அதையும் மீறி இவ்வளவு பணம் எப்படி வெளியில் வருகிறது? எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? வருமான வரித்துறை வேட்டை என்ற பெயரில் சேகர் ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அன்புநாதன் வீட்டுக்குச் சென்றார்களே, அவர்கள் வீட்டில் என்னதான் எடுத்தார்கள்? எவ்வளவு எடுத்தோம் என ஏன் மக்களிடம் சொல்லவில்லை? போனமுறை 89 கோடி கொடுத்தது குற்றம் எனத் தேர்தலை ரத்து செய்தார்கள். இந்த முறையும் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அடி விழும். இங்கு காசு கொடுக்கவில்லையென்றால் அடி விழும். இதை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால்தான் முடியும். அதனால், இளைய தலைமுறையினர் ஒரு மாற்று அரசியலுக்குத் தயாராக வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்
அடுத்த செய்திஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – வடகாடு