முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனித உரிமைப் போராளியும், சூழலியல் செயற்பாட்டாளரும், சோக்கோ அறக்கட்டளை நிறுவனருமான…

0

மனித உரிமைப் போராளியும், சூழலியல் செயற்பாட்டாளரும், சோக்கோ அறக்கட்டளை நிறுவனருமான போற்றுதற்குரிய ஐயா வழக்கறிஞர் மகபூப் பாட்சா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு, மரண தண்டனை ஒழிப்பு உள்ளிட்ட மனித உரிமை களத்தின் பல்வகைப் போராட்டத் தளங்களில் நேரடியாகப் பங்கேற்று தமது அளப்பரிய செயற்பாடுகள் மூலம் வென்றெடுத்த பெருந்தகை.

வனக்காவலர் ஐயா வீரப்பன் அவர்களைத் தேடுவதாகக் கூறி அரசு காவல்துறையினர் மூலம் மலைவாழ் பழங்குடி மக்கள் மீது நடத்திய கொடுந்தாக்குதலுக்கு எதிராகப் போராடி, நீதிபதி சதாசிவம் ஆணையம் உருவாகவும், 1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாமிரபரணி படுகொலைகள் குறித்துப் பொது விசாரணை நடத்தி 42 பக்க விசாரணை அறிக்கை வெளியிடக் காரணமாக திகழ்ந்ததும், தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் மரண தண்டனையை நீக்கவும், எழுவர் விடுதலைக்கும் துணை நின்றதும் ஐயா அவர்கள் ஆற்றிய அரும்பணிகளில் மிக முக்கியமானதாகும்.

ஆறுகள், மலைகள், காடுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாகக் கையளிக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாக குரல்கொடுத்து சுற்றுச்சூழல் போராளியாகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர். மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி அமைப்பாக உருவாக்கியதில் வென்று காட்டிய ஐயாவின் புகழ் தனிமனித உரிமைகள் மண்ணில் பாதுகாக்கப்படும் நாள் வரை நிலைத்திருக்கும்.

ஐயா மகபூப் பாட்சா அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சட்டத்துறை நண்பர்களுக்கும், மனித உரிமை மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

மனித உரிமைப் போராளி ஐயா மகபூப் பாட்சா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை…
அடுத்த செய்திஇந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம்…