காச நோய் மருந்து தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி லட்சக்கணக்கான நோயாளிகள் உயிரோடு இந்திய ஒன்றிய பாஜக அரசு விளையாடுவது கொடுஞ்செயல்!
இந்திய சுகாதாரத் துறையின் காச நோய் ஒழிப்பு திட்ட இயக்குநர் ராஜேந்திர ஜோஷி கடந்த 18.3.2024 அன்று மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாடு முழுவதும் காச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் 27 இலட்ச நோயாளிகளுக்குத் தேவைப்படும் மாதாந்திர ATT எனப்படும் உயிர் காக்கும் மருந்துகளை, இந்திய ஒன்றிய அரசால் சில எதிர்பாராத காரணங்களால் மாநில அரசுகளுக்கு அனுப்ப இயலாது என்றும், இந்த நிலை, அடுத்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் நீடிக்கும் என்றும், எனவே அந்தந்த மாநில அரசுகளே ஆங்காங்கே (Local Purchase) தனியார் நிறுவனங்களில் காச நோய்க்கான மருந்தினை வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் செய்தி அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காச நோய்க்கு போதிய மருந்தினை ஏற்பாடு செய்யாமல் செயற்கையான தட்டுப்பாடினை ஏற்படுத்தி இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு
லட்சக்கணக்கான காசநோயாளிகள் உயிரோடு விளையாடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒரு புறம், 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை இந்தியாவிலிருந்து அடியோடு அழித்து விரட்டி விடுவதுதான் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் இலக்கு என்று 2018 முதல் பிரதமர் மோடி வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் சாதாரண காச நோய்க்கும் மருந்தில்லை, MDR TB என்று சொல்லப்படும், முற்றிய மற்றும் மருந்து எதிர்ப்பு கிருமிகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும் மிகக்கொடிய காச நோய்க்கும் மருந்தில்லை என்றால், வீடு மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்வா சாவா என்று போராடிக் கொண்டிருக்கின்ற நோயாளிகள் வேறு எங்கு தான் செல்வார்கள்?
ஏற்கனவே மருந்தெதிர்ப்பு காச நோய் எனப்படும் MDR-TB க்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரே மருந்தான டெலமனிட் (Delamanid) கடந்த செப்டம்பர் 2021 முதல், இன்று வரை தட்டுப்பாட்டில் இருந்துவரும் அவல நிலையில், தற்போது மருந்துகளுக்கு கட்டுபடக்கூடிய காச நோய்க்கும் முற்றிலுமாக மருந்துகள் கையிருப்பு இல்லை என்பது காச நோய் பரவுவதற்கான பேராபத்தான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. போதிய அளவில் மருந்துகள் கடைசி நேரத்தில் தான் இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு தெரிவிக்க வேண்டுமா? காச நோய்க்கான மருந்தினைக் கூட பெற்றுத்தர திறனற்ற பாஜக அரசால் எப்படி காச நோயை முற்றிலுமாக ஒழித்திட முடியும்?
இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு அரசும் காச நோய் மருந்து வாங்குவதற்கான போதிய நிதியினை சுகாதாரத்துறைக்கு ஒதுக்காதது அடுத்த அதிர்ச்சியாகும். நோயாளிகளே தங்களது சொந்த செலவில் காச நோய்க்கான மருந்தினை வாங்கிக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்துவது வெட்கக்கேடானதாகும்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் காச நோயாளிகளின் உயிரோடு விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும்.
ஆகவே, தனியார் நிறுவனங்களிடமும் காச நோய் மருந்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு லட்சக்கணக்கான நோயளிகள் சாவின் விளிம்பில் போராடி வரும் தற்போதைய கொடுஞ்சூழலில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் இனியும் அலட்சியமாக செயல்படாமல், காச நோய்க்கான மருந்துகள் விரைந்து கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




