எழுத்தறிவித்த இறைவன் நமது ஐயா பெருந்தலைவர் காமராசர் நினைவைப்போற்றுவோம்!
தமிழ்நாட்டில் மூடப்படவிருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, மேலும் 12000 பள்ளிகளைத் தொடங்கி வைத்து, இலவச மதிய உணவு கொடுத்து ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்!
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளை கட்டியதோடு 33000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த பெருந்தகை!
18க்கும் மேற்பட்ட மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கி தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்!
நாட்டு மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டே இத்தனை சாதனைகள் செய்த ஆட்சியில்…
ஒரு துளி மது இல்லை; மதுவினை விற்று அரசை நடத்தவில்லை..!
இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை..!
நாட்டின் விடுதலைக்கு 8 ஆண்டுகள் சிறை ஈகம் புரிந்த நமது பாட்டன் ஐயா காமராசர் அவர்கள்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைத்தலைவர்!
எத்தனை எத்தனை பதவிகள் வகித்தபோதும் ஒற்றை ஊழல் முறைகேடு புகார் இல்லை..! கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..! குடும்பத்து வாரிசுகளுக்கு பதவிகொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தனிப்பெருந்தலைவரின் ஆட்சி காலத்தில் நாங்கள் வாழவில்லையே என்ற ஏக்கம் நெஞ்சில் நிழலாடுகிறது.
"தங்கமே! தன்நிலவே!
தென்பொதிகைச் சாரலே!
சிங்கமே என்றழைத்து
சீராட்டிய தாய்த் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையுமில்லை!
தூயமிகு மணிமண்டபங்கள்,
தோட்டங்கள் என ஏதுமில்லை;
ஆண்டி கையில் ஓடு இருக்கும்
அதுவுமில்லை உன் கையில்..!” என்று கவியரசர் கண்ணதாசன் உள்ளம் உருகி பாடியதற்கேற்ப,
அரசியல் தூய்மைக்கு, அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கு வரைவிலக்கணமாய், தன்னலம் கருதாது வாழ்ந்த
தன்னிகரற்ற அம்மாதலைவனை தமிழ்நாடு தோற்கடித்த பிறகுதான் தடுமாறிபோனது; தடம்மாறிப் போனது! இன்றுவரை அவ்வரலாற்று பிழையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது!
நமது தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், வழிவழியே வருகிற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




