இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா அவர்களின் அன்புமகன், நடிகர்-இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட திரைக்கலைஞன், என் ஆருயிர் இளவல் மனோஜ் அவர்களின் எதிர்பாராத திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
சிறுவயது முதலே, குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக நான் பார்த்து வளர்ந்த பிள்ளை அன்புத்தம்பி மனோஜ் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பதையே ஏற்க மனம் மறுக்கிறது. திரைக்கலை குறித்த ஆழ்ந்த அறிவும், அசாத்திய திறமையும் கொண்ட தம்பி மனோஜ் அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தமிழ்த்திரைத்துறையில் சிறந்த இயக்குநராகத் தடத்தைப் பதிக்கவேண்டுமென தம்பியை நான் பேரன்புகொண்டு வாழ்த்தியது நெஞ்சில் நிழலாடுகிறது. திரைத்துறையில் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவும், பற்றுறுதியும் அவருக்குள் இருந்தது. அவையெல்லாம் ஈடேறும் முன்பே நிகழ்ந்துள்ள தம்பியின் மறைவு ஆற்ற முடியாத துயரத்தைத் தருகிறது.
பெற்ற பிள்ளையை இழந்து முற்றாக உடைந்துபோயுள்ள அப்பா பாரதிராஜாவுக்கும், அம்மாவுக்கும், தங்கை நந்தனா, தந்தையை இழந்து தவிக்கும் மகள்கள் ஆர்த்திகா, மதிவதனி ஆகியோருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
தம்பி மனோஜ் அவர்களின் மறைவால் பெருந்துயரில் வாடும் உற்றார் உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி மனோஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



