சென்னை குரோம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புது வாழ்வு ஜெம்ஸ் பேராயத்தின் பேரன்பிற்குரிய தந்தை பேராயரும், திருமறைப் பேரறிஞருமான முனைவர் தயானந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
பேராயர் தயானந்தன் அவர்கள் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முதுபெருந் தலைவராகவும் உலகத் தமிழ் கிறிஸ்தவர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டதுடன் ஆசிய சர்வதேச ஊழியர் பேராயத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ திருச்சபைகளின் மாமன்றத்தின் தந்தை பேராயருமாகச் செயற்பட்ட பெருந்தகை.
இறைப் பணியாளர்களின் ஒப்பற்ற ஊன்றுகோலாகவும், கிறிஸ்தவ உலகின் தன்னிகரற்ற தலைவராகவும், இறை நம்பிக்கையாளர்களின் தகப்பனாகவும் திகழ்ந்த பேராயர் ஐயா தயானந்தன் அவர்களின் ஒப்பற்ற வாழ்க்கையை நோக்கும்போது: "இறையன்பர்களின் சாவு கடவுளது பார்வையில் மிக மதிப்புக்குரியது" என்ற தாவீது அரசரின் கூற்று நினைவுக்கு வருகிறது.
ஐயா அவர்கள் விவிலியத்தைப் பகுத்துப் போதிக்கும் சிறந்த பேராசிரியர், பிரசங்க பீரங்கி என மக்களால் அழைக்கப்பட்டவர். எச்சூழலிலும் மகிழ்ச்சியின் குரலோடு, மார்தட்டி பேசும் மகத்துவ மனிதரின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறேன்.
பேராயரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், "நல்லாருக்கு ஒரு கேடும் வராது' என்ற விவிலிய வாசகத்தின்படி அன்னாரது குடும்பத்தாரை மனஅமைதி ஆட்கொள்ள நானும் இழப்பில் பங்கேற்கிறேன்.



