முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சாதிகள் இல்லையடி பாப்பா என்று, சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!…

0

சாதிகள் இல்லையடி பாப்பா என்று,
சமூகநீதி குரலெடுத்துப் பாடிய குயில்!

தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா; என்று,
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி, கவிப்புரட்சிக்கு வித்திட்ட பைந்தமிழ் பாவலன்!

சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? என்று,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்துப் பாடச்செய்த பெருங்கவி!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! என்று பாடி,
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோமென
தரணி எங்கும் தமிழ்ப் புகழ் பாடிய பெருமகன்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு! என்று,
செந்தமிழ் நாட்டினைப் பைந்தமிழ் பாட்டினில்
வைத்துப் போற்றிய பெரும்பாட்டன்!

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! என்று,
தெள்ளு தமிழில் தேச விடுதலைக்குப்
பள்ளு பாடிய தென்தமிழ் நாட்டான்!

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி – கிளியே
ஊமைச் சனங்களடீ! என்று,
கஞ்சிக்கில்லாது அதன் காரணம் அறியாது
துஞ்சி மடிவோரைக் கண்டு நெஞ்சு பொறுக்காது
வெஞ்சினம் கொண்டு வெகுண்ட தமிழ்க்கவி!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்கடிப் பெண்ணின் குணங்களாம்; என்று
மண் விடுதலை பாடிய வாயால்
பெண் விடுதலையும் பாடிய பெருந்தகை!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்று,
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவிட
இறவாத புதுக்கவிதை நூல்கள் இயற்றி
தெருவெலாம் தமிழ் முழக்கம் செய்த
பைந்தமிழ்ப் பாவலன்!

பெரும்பாவலர் நம்முடைய பாட்டன் பாரதியார் அவர்களின் தமிழ்ப்புகழைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதிருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!…