தம் வாழ்வு முழுவதையும் தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய எழுச்சிக்காகவும், தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்து தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எமக்கு முன்னோடியாகவும், முன்னத்தி ஏராகவும் விளங்கும் என்னுயிர் தாய்மாமன் தமிழ் முழக்கம்
சாகுல் அமீது அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
நான் திரைத்துறையில் இருந்த காலம் தொட்டு என் மீது பேரன்பு கொண்டு பேருதவிகள் பல புரிந்த பெருந்தகை மாமா சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி தொடங்கியவுடன் என் தோளுக்கு துணையாக நின்று, தன்னைவிட வயதில், அரசியல் அனுபவத்தில் இளையவன் என்ற பாகுபாடு இன்றி, ஒரு சிறு முரணுக்கோ, முணுமுணுப்பிற்கோ ஒருபோதும் இடமளிக்காது நான் இட்டப்பணியை தம் வாழ்நாள் கடமையாக ஏற்று செயல்பட்ட பேரன்புக்காரர்!
தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழை பல ஆண்டுகளாக நடத்தியப் பெருமைக்குரியவர். ஈழத்தாயகத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட மாமா சாகுல் அமீது அவர்கள், 2002ஆம் ஆண்டு, தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னையில் திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் வதைப்பட்டார். ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவை தவிர, பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றவர்.
சிறைக்கொட்டடியிலும், இன மீட்சிப் போராட்டக் களத்திலும், வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த மாமா சாகுல் அமீது அவர்கள், பெரும் செல்வந்தராக சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க இருந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளி, அளப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாய் சிறையிலே கிடந்து வாடியபோதும் எவ்வித சமரசத்திற்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது நோய்வாய்ப்படும் காலம்வரை களத்திலேயே நின்ற தமிழ்த்தேசியப் பெரும் போராளி!
தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் தமிழ்த்தேசியவாதியாகி உறுதியாக களத்தில் நின்றதனால், தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது 35 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழ் இனத்துக்காக பாடுபட்ட பேராளுமை!
நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தமிழ் மண்ணின் உரிமைப் போராட்டங்களிலும், தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பங்கெடுத்ததுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப்
பரப்பிய பெருமைக்குரியவர்.
தமிழினத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும்,
நாம் தமிழர் கட்சியின் மீதும் அளவற்ற பற்று கொண்டு மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் ஆற்றிய அளப்பரிய தமிழ்த்தேசியப் பெரும் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்!
தமிழ்த்தேசியப் போராளி, அன்பிற்குரிய தாய்மாமன்
தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




