சேரன்மகாதேவியில் சூறைக்காற்றால் அடியோடு சாய்ந்த 3.5 இலட்சம் வாழை மரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; காவிரிப்படுகை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, மக்காச்சோளம் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தீவிர வடகிழக்குப் பருவமழை மற்றும் சூறைக்காற்று காரணமாகச் சேரன்மகாதேவி வட்டத்தில் பயிரிடப்பட்ட 3.5 இலட்சம் வாழைமரங்கள் முறிந்து விழுந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பயிரிட்டு பாராமரித்த வாழைமரங்கள் குலை விடும் நிலையில் முறிந்து விழுந்ததால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து வீசிய சூறைக்காற்றுக் காரணமாக சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராகியிருந்த 3.5 இலட்சம் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஒரு வாழை மரத்திற்கு 100 ரூபாய் முதல் 125 ரூபாய் என்ற அளவில் பல இலட்ச ரூபாய் செலவிட்டு பராமரித்த விவசாயிகள், தற்போது அனைத்தையும் இழந்துள்ள நிலையில், வாழை மரம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 50 ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசோ வாழை மரம் ஒன்றுக்கு 10 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்துள்ளதால் வாழை விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் மற்றும் வாழை பயிரிடும் முழுப் பருவம் எனத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளை மேலும் நெருக்கடியில் தள்ளித் துன்புறுத்தும் விதமாக குறைந்தபட்ச இழப்பீடு கூட வழங்காமல் திமுக அரசு ஏமாற்றுவது வாழை விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
அதுமட்டுமின்றி காவிரி படுகை மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பெய்த கனமழையால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளதோடு, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம் போன்ற வேளாண் பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியீடாதது ஏன்? கடந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்படைந்த குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா, தாளடி இளம் பயிர்களுக்கான இழப்பீட்டை கூட திமுக அரசு இதுவரை இதுவரை வழங்காமல் ஏமாற்றி வருவது ஏன்? வேளாண்துறை மூலம் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பைக் கூட திமுக அரசு இதுவரை மேற்கொள்ளாதது ஏன்?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கும் துயர்நிதி வழங்குவதில் திமுக அரசு காட்டிய அக்கறையும், வேகமும், பயிர் வளர்த்து நம் அனைவரின் உயிர் காக்கும் விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்குவதில் காட்டாதது ஏன்? பெருநகரங்களில் மழைநீரை வெளியேற்ற நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் திமுக அரசு, விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி பயிர்களை காக்க வடிகால்களை சீரமைக்கத் தவறியது ஏன்? பயிர்களை அழியவிட்டு, விவசாயிகளை பெரும் நட்டத்திற்கு ஆளாக்கி, உரிய இழப்பீடும் வழங்காமல் தவிக்க விடுவதுதான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு விவசாயிகளையும், வேளாண்மையும் பாதுகாக்கும் முறையா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை கூட வழங்காத திமுக அரசு வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதால் விளைந்த நன்மை என்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக அடியோடு சாய்ந்த வாழை மரங்களால் பெரும்பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு, வாழை மரம் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். மறு விதைப்பு செய்த குறுவை நெல் மகசூல் பாதிப்புக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடும், சம்பா மற்றும் தாளடி பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ற அளவில் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும், விளைநிலங்களில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றிட, வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி





