முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில்…

0

முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப்படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்த 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

ஈழத்தில் தமிழினம் சிங்கள இனவெறிக்குப் பலியாவது பொறுக்காமல், அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்ட அன்றைய ஆட்சியாளர்களைக் கண்டும், உணர்வற்று கிடந்த மக்களை கண்டும் மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து பேரெழுச்சித் தீயைப் பற்ற வைத்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான்.

’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்ளுக்கும், ’தமிழரை அழிப்பதற்கு துணைநின்ற இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் தன் உயிராயுதத்தால் பாடம் புகட்டினான். தன் இன்னுயிரை ஈந்து உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தை உணர்வு சூடேற்றி உசுப்பினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். இனத்தைக் காக்க பறிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து அன்றைக்கு 20 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் அன்றைய திமுக ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும், அதிகாரத்திமிரும் முடிந்து போகவில்லை, இன்றுவரை தொடர்கிறது என்பதே நிகழ்காலம் நமக்கு உணர்த்தும் உண்மை.

முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்றளவும் இலங்கையின் இனவாத வெறி பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது. அதன் நீட்சியாகவே ஒவ்வொரு நாளும் கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.

நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு நம் சிந்தைகளில் இன்றளவும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. முத்துக்குமாரின் உயிர் ஈக லட்சியம் இன்றில்லையேலும் என்றாவது அடைவது உறுதி.
எத்தனை தடை வந்தபோதிலும் தளராத உறுதியுடன் அவரின் லட்சியப் பயணத்தை தொடர்வதே அந்த மாவீரனுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.

வீரமும் விவேகமும் மானமும் கொண்ட துடிப்பு மிக்க இளைஞன் முத்துக்குமாரின் அளப்பரிய ஈகத்தை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை குறியீடாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது.

தமிழீழத் தாயகம் காக்க தன்னுயிர் தந்த தனல் ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமார் அவர்களுக்கு வீரவணக்கம்!

முந்தைய செய்திதலைநகர் சென்னையில் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு படுகொலை…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் பொருளாளர் மனிதநேய மருத்துவர் போற்றுதற்குரிய ஐயா…