திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!

3

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சுற்றுச்சூழலை சீர் கெடுக்காத மாற்று மின் பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு திமுக அரசு அனுமதித்தது எப்படி? தமிழ்நாட்டில் ஏற்கனவே பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் திமுக அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்ககூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
அடுத்த செய்தி*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*