‘வீரத்தமிழச்சி’ செங்கொடிக்கு சீமான் வீரவணக்கம்!

9

உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்!

தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு!

தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம் தங்கை செங்கொடி!

அதனால்தான் அவளது திருவுருவத்தையே மகளிர் பாசறையின் இலட்சிணையாக வார்த்துக்கொண்டது நாம் தமிழர் கட்சி. அவள் எந்த உன்னத நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்தாளோ அந்தப் பெருங்கனவு இன்றைக்குத் தடை பல கடந்து நிறைவேறிவிட்டது என்பது மனநிறைவைத் தந்தாலும், அன்புத்தங்கை நம்மோடு இருந்து போராடி இருந்தால் கண்முன்னே அண்ணன்மார்களின் விடுதலையைக் கண்டு மகிழ்ந்திருப்பாளே என்ற ஏக்கம் நெஞ்சை வருத்துகிறது.

“மறப்பது மக்களின் வழக்கம்; புரட்சிப்போராட்டங்கள் மூலம் அதனை நினைவுப்படுத்த வேண்டியது போராளிகளின் கடமை!” என்ற வழியில், தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி அன்புத்தங்கை செங்கொடிக்கு என்னுடைய வீரவணக்கம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சிவகங்கை மண்டலம் (சிவகங்கை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்தி‘பெரும்புலவர்’ ஐயா இலக்குவனார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!