திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் ஏழுமலை மரணமடைந்துள்ளது மனிதப்பேரவலம்!
@CMOTamilnadu
@mkstalin
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம்,
அத்திமாஞ்சேரி அடுத்து கர்லம்பாக்கம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததை, அறியாது குடித்த கிராம மக்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டு,
40 க்கும் மேற்பட்டவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
முதியவர் ஏழுமலை உயிரிழந்த துயரநிகழ்வு நடந்தேறியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரில், கழிவுநீர் கலக்கும் அளவிற்கு அலட்சியமாக செயல்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த ஜூன் மாதம்
சென்னை சைதாப்பேட்டை அபித்காலனியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச்சேர்ந்த ராஜேஷ்குமார் – சுமன்குமாரி இணையரின் 11 வயது மகன் யுவராஜ் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்த பெருந்துயரம் நடந்தேறிய நிலையில், அதிலிருந்து தமிழ்நாடு அரசு எவ்வித படிப்பினையும் பெறாதது ஏன்? அதன் பிறகாவது தமிழ்நாடு முழுவதும் மக்கள் பருகும் குடிநீரில் கழிவுநீர் கலக்காமலிருக்க கடும் நடவடிக்கை எடுத்து, உரிய வழிகாட்டலை வழங்கியிருந்தால் தற்போது மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்குமா? இப்படி அலட்சியமாக செயல்பட்டு இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலிகொள்ளப்போகிறது? உயிர் காக்கும் குடிநீரே, உயிரைக்கொல்லும் விசமாக மாறியது எப்படி? மாற்றியது யார்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும்
திராவிட மாடலா? மக்களின் உயிர்த்தேவையான சுத்தமான குடிநீரைக்கூட வழங்க முடியாத அரசால், வேறு எதை வழங்கிவிட முடியும்?
சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் பயன்படுத்திய குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளிவரும் முன்பே, சிறுவன் யுவராஜின் மரணத்திற்கு குடிநீர் காரணமில்லை என்று அறிவித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை தற்போது என்ன காரணம் சொல்லப்போகிறது? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விடயத்தில் முதலில் 5 பேர் பாதிக்கப்பட்டச் செய்தி வெளியானபோது அவர்களின் மரணத்திற்கு கள்ளச்சாரயம் காரணம் இல்லை என்ற அரசுத்தரப்பின் அவசர விளக்கமே, மேலும் 60 உயிர்களை பலிகொள்ள காரணமாகியது; அதிலிருந்து எவ்வித படிப்பினையும் பெறமாமல், குடிநீர் ஆய்வு முடிவுகள் வெளவரும் முன்பே சிறுவன் மரணத்திற்கு குடிநீர் காரணமில்லை என்ற அரசின் அறிவிப்பால் மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். மக்களின் உடல் நலனையும், உயிர்ப்பாதுகாப்பையும்விட
தன்மீதான குற்றங்குறைகளை மூடி மறைப்பதுதான் திமுக அரசிற்கு முதன்மையாக இருந்தது. அதுபோன்ற துயரங்கள் தற்போது தொடராமலிருக் கர்லம்பாக்கம் குடிநீர் ஆய்வு முடிவுகள் வெளிவரும்வரை, அப்பகுதி குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததற்கு உண்மையான காரணம் என்னவென்பதை எவ்வித ஒளிவுமறைவுமின்றி மக்களுக்கு விரைந்து தெளிவுபடுத்துவதோடு , அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்ட கர்லம்பாக்கம் மக்களுக்கு உரிய நிவாரண உதவியும், மரணமடைந்த ஐயா ஏழுமலை குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள் உயிர்வாழ குடிக்கும் நீரே, உயிரைக் கொல்லும் விசமாகி சிறுவன் யுவராஜ், முதியவர் ஏழுமலை போன்று இனி வருங்காலத்தில் எந்தவொரு உயிரும் பறிபோகாமலிருக்க, பாதுகாப்பான தூய குடிநீரும், உயிர்காக்கும் உயர்தர மருத்துவமும் அனைத்து மக்களுக்கும் சமமாக, தரமாக கிடைப்பதை தமிழ்நாடு அரசு இனியாவது உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




