முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவர் இடிந்துவிழுந்து அன்புமகன் மோகித் உயிரிழப்பு; அரசுப்பள்ளிகளைத்…

4

திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவர் இடிந்துவிழுந்து அன்புமகன் மோகித் உயிரிழப்பு; அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல் இன்னும் எத்தனை மாணவச்செல்வங்களை திமுக அரசு பலிகொடுக்கப்போகிறது?

@CMOTamilnadu @mkstalin

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவந்த அன்புமகன் மோகித் மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிழந்த செய்தியறிந்து பெரும் அதிச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பெற்ற பிள்ளையை பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பில் தவிக்கும் மோகித் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசுப்பள்ளி சுவர்கள், மேற்கூரைகள் இடிந்துவிழுவதும், அதில் பள்ளி மாணவ – மாணவியர் படுகாயமடைவதும் தொடர்கதையாகிவிட்டது. கடந்த 05.12.25 அன்று புதுக்கோட்டை மாவட்டம் சிறுநாவூர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிறு காயங்களோடு மாணவர்கள் உயிர் தப்பினர். கடந்த 21.09.25 துறையூர் சிங்களாந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளி திறந்து 9 மாதமே ஆன பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்துபோது பள்ளி விடுமுறை என்பதால் பெரும் விபத்திலிருந்து மாணவர்கள் உயிர் தப்பினர். கடந்த 03.08.25 அன்று செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 அடி தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்தது. சுவர் இடிந்து விழுந்தது இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த 03.04.25 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில், திடீரென பள்ளி கட்டட மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் 5 பள்ளி மாணவர்கள் தலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.

கடந்த 03.01.25 அன்று இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்கடப்பந்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ் படுகாயமடைந்தான். கடந்த 23.03.23 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பருத்திக்குடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3ஆம் வகுப்பு மாணவர் அன்புமகன் விஷ்ணு தலையில் 20 தையல்கள் போடும் அளவிற்குப் பலத்த காயமடைந்த துயரம் அரங்கேறியது. அதே ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, ஒன்றாம் வகுப்பு மாணவி அன்புமகள் சுபிஸ்னாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவையெல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஒரு சில பள்ளி கட்டிட விபத்துகள் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பழுதான பள்ளியின் சுவர்களும், மேற்கூரைகளும், சிமெண்ட் காரைகளும் தொடர்ந்து இடிந்து விழுகின்றது. அதுமட்டுமின்றி, இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை பல்லாயிரமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு படித்துவந்த 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனே, வழக்கம்போல அனைத்து பள்ளிக்கூடங்களின் தரத்தையும் ஆராய ஒரு குழுவினை அமைத்தது திமுக அரசு. கடந்த நான்கு ஆண்டுகளில் அக்குழு ஆராய்ந்து அளித்த அறிக்கை எங்கே? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இடிந்து விழும் நிலையிலிருந்த எத்தனை தரமற்ற பள்ளி கட்டிடங்கள் இழுத்து மூடப்பட்டது? எத்தனை பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன? மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பள்ளிகள் எத்தனை? என்ற கேள்விகளுக்கு திமுக அரசின் என்ன? முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாத, பள்ளிகள் எத்தனை? படிக்க பாதுகாப்பான கட்டிடம் இன்றி நாள்தோறும் மரத்தடியில் நடக்கும் வகுப்புகள் எத்தனை என்றாவது திமுக அரசுக்கு தெரியுமா?

(1/2)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை அரசுப்பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன? ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளிகள் மூடப்படுவது ஏன்? இந்த ஆண்டு மட்டும் 208 அரசுப்பள்ளிகளை திமுக அரசு மூடியது ஏன்? திராவிட மாடல் ஆட்சியில் 45 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 56 இலட்சம் மாணவ மாணவியர் படிக்கும் நிலையில், வெறும் 13000 தனியார் பள்ளியில் 64 இலட்சம் மாணவர்கள் படிப்பது எப்படி? ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டும், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டும் செல்வதும் ஏன்? உயர் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதை பெரும் சாதனையாக பெருமை பேசும் திமுக அரசால் அரசுப் பள்ளி – கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க முடியாதது ஏன்? அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஒரு இலட்சம் காலிப்பணியிடங்களை திமுக அரசு இதுவரை நிரப்பாதாது ஏன்? அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் சீரமைக்காமலும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமலும், போதிய ஆசிரியர்களை நியமிக்காமலும் ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று திமுக அரசு நடிகர்களை வைத்து வெற்று விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.

கடந்தகாலத் துயர நிகழ்வுகளைப் படிப்பினையாகக் கொண்டேனும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி போன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் சீர் செய்யப்பட்டு அவற்றின் தரமானது மேம்பட்டிருக்கும். ஆனால், அதனைச் செய்யத் தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கே, தற்போது அன்புமகன் மோகித் உயிரிழக்க முதன்மைக் காரணமாகும். பழுதான பள்ளிகளை சீரமைக்காமல் அலட்சியப்படுத்தி இன்னும் எத்தனை மாணவச்செல்வங்களை திமுக அரசு பலிகொடுக்கப்போகிறது? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? மெட்ரோ திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டும் திமுக அரசிடம் பள்ளிக்கூடம் கட்ட நிதி இல்லையா? கார் பந்தயம் நடத்தவும், கலைஞர் அரங்கம் கட்டவும் பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் திமுக அரசிடம் பள்ளிக்கூடங்களை தரமானதாக மாற்ற நிதி இல்லையா? பல்லாயிரம் குடும்பங்களை சீரழிக்கும் மதுக்கடைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் பல நூறு கோடிகளைச் செலவு செய்யும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு மட்டும் தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்பது அவமானகரமானதாகும்.

ஆகவே, ஒவ்வொரு முறையும் பள்ளிக்கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஏதுமறியா அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த பிறகு, பெயரளவில் ஆய்வுக்குழு அமைக்கும் கண்துடைப்பு நாடகத்தை திமுக அரசு இனியாவது கைவிட வேண்டும். உடனடியாக முதுநிலை பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளின் உறுதித்தன்மை குறித்து முறையாக ஆய்வுசெய்ய வேண்டும். நிபுணர் குழு அளிக்கும் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ள பள்ளி, கல்லூரிகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவ கண்மணிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த அன்புமகன் மோகித் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – வால்பாறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…