தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற தம் வாழ்வின் இறுதிவரை 'எழுகதிர்' என்ற தமிழ்த்தேசிய மாத இதழை தொய்வின்றி நடத்திய பெருந்தமிழர், இனத்திற்கு தீங்கு விளைவித்த போலிப்பெரியார்களை அம்பலப்படுத்திய தமிழ்ப்பெரியார், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு கழகத்தின் தலைவர், போற்றுதற்குரிய தமிழறிஞர், நம்முடைய ஐயா அருகோ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அண்மையில் ஐயா அருகோ அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிய அவருடைய இல்லத்திற்கு சென்றபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் என்னை பெரிதும் நெகிழச்செய்கின்றன. நோயினால் உடல் நலிவுற்ற நிலையிலும் தன்னலம் கருதாது, தமிழினம் இன்னும் அரசியல் விடுதலை பெறவில்லையே என்று வருந்திய ஐயாவின் மொழி, இனப்பற்று அளப்பரியது. என் கைகளை பற்றிக்கொண்டு உங்களை நம்பித்தான் தமிழ்த்தேசிய அரசியலை விட்டுச்செல்கிறேன்.. உங்களுடைய காலத்திலாவது தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்க வேண்டும் என்று ஐயா இறுதியாக என்னிடம் கூறிய வாய்மொழிகள் ஒவ்வொன்றும்.என்னை உறங்கவிடாமல் இனவிடுதலை இலக்கினை நோக்கி இன்னும் வேகமாக ஓடச்செய்யும் அருமருந்தாகும். சமகால அரசியல் வரலாற்றின் உயிர்ச்சான்றாக திகழ்ந்த ஐயா அருகோ அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் தமிழ்த்தேசிய அரசியல் போராளியாக திகழ்ந்து, நிறைவேறாத தமிழ்த்தேசிய பெருங்கனவோடு வாழ்ந்து மறைந்த நம் முன்னவர்களில் ஐயா அருகோ அவர்களும் ஒருவராகிவிட்டார் எனும் செய்தி பெருந்துயரத்தை தருகிறது, என்றாலும் ஐயா அவர்களின் பெருவிருப்பமாக, வாழ்நாள் இலட்சியமாக இருந்த தமிழ்த்தேசிய அரசியலை நம் சமகாலத்தில் உறுதியாக வெல்ல வைப்போம் என்று உளமார நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்பதே ஐயா அருகோ அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக அமையும்!
ஐயா அருகோ அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
வாழ்வின் இறுதிநாள் வரை தமிழ்த்தேசியராகவே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருந்தகை நம்முடைய ஐயா அருகோ அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




