முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று…

3

உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

இன்று மாவீரர் நாள்..!

மங்காப் புகழ் கொண்ட தமிழர் என்ற தேசிய இனத்தின் தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக தாய் மண்ணில் விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள்.

தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவில் நிறுத்தி போற்றுகின்ற புனித நாள்.

தாயக விடுதலை என்கின்ற உச்ச இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமாக மாறிப்போன மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள்.

அடிமை காரிருளை நீக்க, தங்களையே எரித்து விடுதலை வெளிச்சம் தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, காந்தள் மலரும் இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் நிறுத்தி இனத்தின் விடுதலை என்கின்ற இலக்கிற்கு வழிகாட்டுகிற ஒளிவிளக்குகளாக நினைத்து போற்றி வணங்குகிற பொன்னாள்.

இந்த நாள் விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காக இன்னுயிரை ஈந்தவர்களை நினைத்து அழுது, புலம்பும் நாள் அல்ல; மாறாக எந்த புனித கனவிற்காக, எந்த தமிழீழ நாட்டை அமைப்பதற்காக, நம் மாவீரர்கள் தங்கள் உயிரை ஈந்தார்களோ, அந்த புனிதக் கனவை நம் நெஞ்சத்தில் நிறைத்து வீழ்வதெல்லாம் எழுவதற்கே என நமக்கு நாமே உறுதி ஏற்றுக் கொண்டு மண்ணின் விடுதலைக்காக களமாடிட பற்றுறுதி கொள்கின்ற வரலாற்று நாள்.

நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என்றார் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு இறையாண்மை தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும் என அரசியல் அறிவியல் கூறுகிறது . அத்தகைய வரலாற்று புகழ்வாய்ந்த ஒரு தேசிய இனத்திற்காக, மண் விடுதலை எனும் இலட்சிய இலக்கினை அடைய, தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் இதுவரை உலகம் கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள்.

தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி எதிர்ப்புக்கு என்று இயக்கம் கட்டியவர்கள் இருந்த தாயகத் தமிழகத்தில் கூட சாதிக்க முடியாத சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.

தமிழ்ப் பேரினம் மட்டுமல்ல, உலக மானுட இனத்தில் இப்படிப்பட்டவர்கள் எப்படி தோன்றினார்கள் என்று உலகம் வியக்கும் அளவிற்கு பெரும் வீரர்களை தமிழ் மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் அமைப்பு பெற்றிருந்தது. அத்தகைய வீரமும், அறிவும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு மறவர் கூட்டம் கொண்ட மனித ஆற்றலை, அறிவுத்திறனை இந்த இனம் இழந்துதான் நிகழ்ந்ததிலேயே ஆகப்பெரும் இழப்பு என்கிற வலி எப்போதும் எனக்குள் இருக்கிறது.

ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழர்களின் துயரங்களுக்கு ஒரு அரசியல் தீர்வை உலக சமூகம் வழங்கவில்லை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 2009இல் சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இதுகுறித்து ஆட்சி மாறினாலும் அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி மாறினாலும் சிங்கள ஆட்சியாளர்கள்
எவ்வித பதிலையும் அளிப்பதில்லை.

சமீபத்தில் கூட புதிதாகக் கண்டறியப்பட்ட , இன்னும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு கொண்டே இருக்கின்ற ,செம்மணி உள்ளிட்ட தமிழர்களை அநியாயமாக கொன்று புதைத்த மனித புதைகுழிகள் தமிழ் இனப்படுகொலைக்கு மிகப்பெரிய ஆதாரமாக வலுசேர்க்கின்றன. ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுத்த உலக நாடுகளும் ஐ.நா. மன்றமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

ஒவ்வொரு ஐநா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய துரோகமாகும். இன்றளவும் தொடர்ச்சியாக தமிழர்ப்பகுதிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை திணித்து, தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ தாயகத்தில் முற்று முழுதாக ஒழிக்க முயல்கின்றார்கள்.

(1/2)

இலங்கைத் தன்னை ஒரு ஜனநாயக நாடு என சொல்லிக் கொண்டாலும், தமிழர்களின் தாய் நிலமான, எம் தமிழீழ மண்ணில் போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் கூட சிங்கள படையணிகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. சனநாயகத்தின் வாயிலாக தேர்தல் மூலம் பொறுப்பிற்கு வந்த ஈழ மண்ணின் தமிழின தலைவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டு இருப்பது சிங்கள இனவாத அரசு ஒருபோதும் மக்கள் சனநாயகத்தை மதிக்காது என்கிற நிலையை தெளிவாக காட்டுகிறது. தன் சொந்த நிலத்திலேயே எம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக அடிப்படை வசதிகள் ஏதுமற்று, ஒரு காலத்தில் எம் தேசியத் தலைவரின் புனிதமான ஆட்சியின் கீழ், தமிழீழ தேசத்தில் வாழ்ந்த அந்தக் கனவு வாழ்க்கையை நினைத்து ஏங்கித் தவித்து வருகிறார்கள். இன்று சிங்கள தேசம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டதற்கு முதன்மையான காரணம் எம் தமிழினத்தின் மீது அவர்கள் அநீதியாக நடத்திய போர் தான் என்பதை சிங்களர்களே ஒத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

ஈழத்தில் அரசியல் சூழல்கள் முழுதாக மாறி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் தமிழர்களும் தமிழீழ விடுதலைக்கான தங்களது வியூகங்ளை மாற்றி அமைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறி வருகிற உலக ஒழுங்குக்கு ஏற்ப நாமும் நமது தாயக விடுதலைக்கான வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதிதாக அமைந்திருக்கின்ற வல்லாதிக்க அரசுகளின் ஆட்சி மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ நாட்டின் விடுதலைக்கான வழியை செப்பனிட வேண்டும்.இனியும் உலகத் தமிழர்கள் உதிரிகள் போல சிதறி, தனித்தனி குழுக்களாக, தனித்தனி அமைப்புகளாக, தனித்தனி நபர்களாக தான்மை உணர்வே மேன்மை என கருதி, பிரிந்து பிளந்து நின்றால் இன விடுதலையை அடைய முடியாது என்பதை இப்போதாவது உலகத்தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒற்றுமை ஒன்றே நமது வலிமை அதுவே நமது மாவீரர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கின்ற ஒரே வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித லட்சியத்திற்காக நாம் அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் நமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு இனி நாம் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் நமக்குள் இருக்கின்ற விடுதலைக்கு எதிரான அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் சாகடித்து விடுதலை என்ற ஒற்றை நோக்கத்தில் நாம் அனைவரும் அணி திரள வேண்டும்.

எம் ஈழ உறவுகளின் துயர் நீங்க சிங்கள அரசிற்கு கடுமையான அழுத்தங்கள் தரவேண்டிய கடமை எட்டு கோடிக்கும் மேலான தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வருகிற இந்திய அரசிற்கு உண்டு. தமிழர்களுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கை மாற வேண்டுமானால் இந்தியாவின் அரசியல் நிலைகள் மாற வேண்டும் அதற்கு முதன்மையாக தாயகத் தமிழகத்தில் தாய் மண்ணையும், தமிழ் மொழியையும் உயிராக நேசிக்கிற தமிழ்த் தேசிய அரசியல் மேன்மையுற வேண்டும் என்கின்ற எண்ணம் உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளத்தில் மலர தொடங்கி இருப்பதை நான் நம்பிக்கையாக பார்க்கிறேன். தாயக தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மாபெரும் ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வென்றால் ஒழிய, தமிழ்த் தேசிய இனத்திற்கென்று விடிவு இல்லை என்பதை புரிந்து கொண்டு இந்த புனிதமான மாவீரர் நாளில் தாய்த் தமிழ் உறவுகள் நாம் அனைவரும் வருகிற 2026 தேர்தல் களத்தில் புலிக்கொடி உயர்ந்து விவசாயி வெல்ல உறுதி ஏற்க வேண்டும்.

தொடர்ச்சியாக உலக அரங்கில் அசராது, தமிழீழ விடுதலை சார்ந்து நாம் தருகிற அழுத்தங்கள் மூலம் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு சிங்கள அரசை உட்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் ஒருங்கிணைந்த ஒற்றுமையோடு நமது நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதுதான் இந்த மாவீரர் நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும். அந்த உறுதியோடுதான் தாயக தமிழகத்தில் “நாம் தமிழர்” என்ற மகத்தான படையைக் கட்டி, எந்த அதிகாரத்தால் நாம் வீழ்ந்தோமோ அந்த அதிகாரத்தை கைப்பற்ற பெரும் பாய்ச்சலோடு பயணித்து வருகிறோம். போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இனி அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்று சொன்னவர்கள் கூட மாவீரர்கள் கண்ட கனவை என்ன விலை கொடுத்தேனும் நிறைவேற்றிட தாயகத் தமிழகத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு வருவதை வியப்பாக பார்க்கிறார்கள்.

ஆகவே, தமிழீழ நாட்டின் விடுதலையை நம் தலைமுறையிலேயே அடைவதற்கு, அரசியலாக நாம் வலிமை பெறுவதே ஒரே வழி. அதை நோக்கி தான் மாவீரர் தெய்வங்கள் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மரணம் கண்ணுக்கு முன்னால் நிற்கின்ற அந்தக் கால நொடியில், மங்கா புகழ் கொண்ட மாவீரர்களின் இமைக்காத விழிகளில் உறைந்திருந்த
தாயக விடுதலை என்கின்ற கனவு நம்மை ஒவ்வொரு நொடியும் இயக்கும்.

மண்ணின் விடுதலைக்கு உயிரே விலையானாலும் அந்த உயிரையும் தருவதற்கு துணிந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று ஒவ்வொரு நொடியும் எம் சிந்தையிலும், எம் செயலிலும் எம்மை வழி நடத்தும்.

(2/3)

தாய்மண் விடுதலைக்காக மாவீரர் சிந்திய குருதி என்றென்றும் எம் நினைவுகளில் உலராமல் உள்ளார்ந்த ஆன்ம ஆற்றலாய் ஒளிரும்.

உலகம் இருக்கும் வரை எமது மாவீரர்களின் புகழ் இருக்கும்.‌ அந்தப் புகழ் ஒளியில் எம் தலைவர் பிரபாகரன் கண்ட தமிழீழம் பிறக்கும்.

தாயக கனவில் சாவினை தழுவிய சந்தன பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!

மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி!
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!

(3/3)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திருமுக்கூடல்…
அடுத்த செய்திதமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின்…