எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி-பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

1

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனை திறந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாகச் செயற்பாட்டிற்குக் கொண்டுவராதது வன்மையான கண்டனத்துக்குரியது.

பொதட்டூர்பேட்டை பணிமனைக்கு இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தரைதளம் அமைக்கப்படவில்லை. பணிமனையில் நிலவும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் பேருந்துகள் முறையாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றிப் பொதட்டூர்பேட்டை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள், உரிய நேரத்தில் உரிய மருத்துவ உதவி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் சரியான மருத்துவர்கள் இல்லை அவசர சிகிச்சைப் பிரிவும், மகப்பேறு மருத்துவமும் முறையாகச் செயல்படுவது இல்லை. எதற்கெடுத்தாலும் மேல் சிகிச்சைக்காகத் திருத்தணி அரசு மருத்துவமனை செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். 80,000 மக்கள் வாழும் பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் இப்பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, தமிழ்நாடு அரசு எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி – பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையைப் போக்கி மக்களைக் காக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திகாவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவுநாள்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு