புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

6

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக் காலத்தில் திமுக அரசிற்கு எதிராகக் கருத்துகளைப் பகிரும் எதிர்க்கட்சியினரைப் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய ஒன்றியத்தில் மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோர் மீது எத்தகைய கொடூரமான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் காவல்துறை, சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும் அடக்குமுறை கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன.

திமுக ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம்-ஒழுங்கு சீரழிவினையும் ஊடகம் வாயிலாகத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்த புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, தாக்குதலுக்கு உள்ளான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. அக்கொடுமையின் நீட்சியாகத் தற்போது திமுக அரசு குண்டர் சட்டத்தினைத் தொடுத்துள்ளது கொடுங்கைகோன்மையின் உச்சமாகும்.

பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றி பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

பொய்ப்புகாரை வழக்காகப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்து ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் மிரட்டுவது என்பது, தமது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற திமுகவின் நடவடிக்கைகள் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. திமுக அரசு எது செய்தாலும் சரி என்று ஆதரவு தாளம் போடும் ஒரு சில ஊடகங்களையும், ஒத்து ஊதும் கூட்டணி கட்சிகளையும் போலவே அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற திமுக அரசின் எதேச்சதிகாரமனப்பான்மையால், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் நிலையானது எனும் மமதையில் திமுக அரசின் இத்தகைய ஆட்சி அதிகார அடக்குமுறைகளுக்கும், ஆணவப்போக்கிற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, திமுக அரசு புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுக்கும் கொடும் முடிவை கைவிட்டு, அவர் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1967502940882755945?t=trTQQiCF10E17uoKvg63jg&s=19

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்தி‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!