நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

65

நாகை மாவட்டம், பனங்குடியில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் (Chennai Petroleum Corporation Limited – CPCL) சிபிசிஎல் கடந்த 2019ஆம் ஆண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளைநிலங்களைப் பறித்து, நிலத்திற்கான இழப்பீட்டினைத் தராமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடி வரும் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி வருவது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஎல் நிறுவனம் 620 ஏக்கர் நிலங்களைக் கேட்டபோதே அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களை வழங்க மறுத்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, வேளாண் நிலங்களை அபகரித்து சிபிசிஎல் நிறுவனத்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு, ஐந்து ஆண்டுகளாகியும் அதற்கான இழப்பீட்டினைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி வருவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். ஏற்கனவே 1992ல் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய 600 ஏக்கர் நிலத்தில் 400 ஏக்கர் நிலமானது கருவேலங்காடாக மாறி எவ்வித பயனும் இன்றிக் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

பொன் விளைந்த பூமியான விளைநிலத்தை ஒன்றும் செய்யாமல் கருவேலங்காடாக மாற்றிய சிபிசிஎல் நிறுவனம், மேலும் 620 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது ஏன்? விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பது ஏன்? தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளைநிலங்களைப் பறித்துக்கொண்டு, உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வரும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் பெருங்குடி மக்கள் போராடி வரும் நிலையில், கடந்த 2024ஆம்ஆண்டு மே மாதம், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் சட்டத்தின் ( Rehabilitation and Resettlement Act 2013) படி, குத்தகைத்தாரர்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் இழப்பீடு அறிவித்து, பயனாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திமுக அரசு அவர்களுக்கான இழப்பீட்டை இன்றளவும் பெற்றுத்தராமல் துரோகத்துக்கு துணைநிற்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வேளாண் நிலங்களைப் பறித்து சிபிசிஎல் நிறுவனத்திற்குத் தருவதில் காட்டிய ஆர்வமும், அக்கறையும், விவசாயிகளுக்கு இழப்பீட்டினைப் பெற்றுத்தருவதில் தமிழ்நாடு அரசு காட்டாதது ஏன்? விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக, எண்ணெய் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் சமூக நீதியா? இதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும் முறையா?

ஆகவே, நாகை மாவட்டம் பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்துக்கு தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து பறித்துக் கொடுத்த விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1957710514055967219

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திகோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைப்பெற்றது!
அடுத்த செய்தி‘தெற்கெல்லை மீட்புப் போராளி’ குஞ்சன் நாடார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!