முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகம் போற்றும் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்து தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்வி…

0

உலகம் போற்றும் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்து தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பாக தாத்தா காமராசர் அவர்களின் அளப்பெரும் சாதனைகள் குறித்தும், கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும் அறிய தரும் திறன் போட்டிகள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அந்த நடைமுறையை மாற்றி, இந்த ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் பற்றி மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்து விட்டு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் போன்ற ஒன்றிய – மாநில அரசுகளின் திட்டங்களைப் பற்றிப் போட்டிகளை நடத்த திமுக அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

@CMOTamilnadu @mkstalin

இது முழுக்க முழுக்கப் பெருந்தலைவர் காமராசரின் புகழை மறைத்து இருட்டடிப்புச் செய்யும் மலிவான செயலாகும். பெருந்தலைவர் பிறந்தநாளில் அவரது புகழைப்பற்றிப் பேசாமல், திமுக அரசின் திட்டங்கள் குறித்துப் பள்ளிக்குழந்தைகளைப் பேசச்சொல்லி கட்டாயப்படுத்துவது ஏன்? ஏற்கனவே, ஐயா கருணாநிதி, ஐயா ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாளில் பள்ளிக்குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி திமுக அரசின் திட்டங்களைப் பேசச்சொல்லி வதைத்தது போதாதா? பெருந்தலைவர் பிறந்தநாளிலும் அக்கொடுமைகளைப் பள்ளிக்குழந்தைகள் அனுபவிக்க வேண்டுமா?

ஏற்கனவே, 'பெருந்தலைவர்' என்றாலே அந்தப் பட்டம் தாத்தா காமராசர் அவர்களையே குறிக்கும் என்ற அளவில் மக்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டதை மறக்கடிக்கும் விதமாகவே, தங்களின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ஐயா கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள ஊராட்சிமன்றத் தலைவர்களை, 'ஊராட்சிமன்றப் பெருந்தலைவர்கள்' என்று அழைக்க வேண்டுமென்ற வழக்கத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். தற்போது அவருடைய மகனாகிய தங்களுடைய ஆட்சிக்காலத்தில் ஐயா காமராசரைப்பற்றி வருங்காலத் தலைமுறையினர் அறியவிடாமல் தடுக்கும் இழிவானச் செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளில் பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்றுவரை யாரும் வரவில்லையென்று மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அந்த அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்த அம்மாபெரும் தலைவரின் அழியாப் பெரும்புகழை இத்தகைய மலிவான முயற்சிகளின் மூலம் மூடிமறைத்துவிட முடியாது.

ஆகவே, இதுபோன்ற வலிந்து திணிக்கும் போலிப்புகழ்ச்சி உரைகளை உடனடியாகக் கைவிட பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் வழக்கம்போல அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகள் மற்றும் மகத்தான மக்கள் தொண்டுகள் குறித்து அறிய தரும் திறன் போட்டிகளையே மாணவர்களிடையே நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும்…
அடுத்த செய்திஉலகம் போற்றும் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்து தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்வி…