மொழி புரியாத வடமாநிலத்தவரை காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணம்! – சீமான் கண்டனம்

25

கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது.

வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பை சந்தித்து பெருந்துயரக்கடலில் சிக்கித்தவிக்கும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரை பகிர்ந்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும்.

தமிழர்களை இந்தி கற்கச்சொல்லி திணிப்பதில் காட்டும் அதிகாரத்தையும், ஆர்வத்தையும் தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் வடமாநிலத்தவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் ஏன் இந்திய ஒன்றிய அரசு காட்டுவதில்லை? தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிவாய்ப்பு என்பது உரிமை பாதுகாப்பு முழக்கம் மட்டுமன்று; உயிர் பாதுகாப்பு முழக்கமுமாகும். அதனை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவே தற்போது 3 குழந்தைகள் பலியான துயரம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இதுபோன்ற கொடுமைகள் இனி எங்கும் நிகழாதவாறு தடுக்க இனியேனும் அந்தந்த மாநிலங்களில் அம்மண்ணின் மக்களை மட்டுமே பணியமர்த்த ஒன்றிய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த 3 குழந்தைகளுக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி‘சமூகநீதிப் போராளி’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர் வணக்கம்!