பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

2

தமிழர் இன பெருமைமிகு அடையாளங்களில், மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற நம்முடைய தாத்தா கக்கன் அவர்கள், பொதுவாழ்வில் உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்ந்து காட்டிய ஒரு மகத்தான மாமனிதர்.

பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்கள் பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய பெருந்தகை, தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, அந்தப் பணியை விட்டுவிடு, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொன்னவர் நம்முடைய தாத்தா கக்கன் அவர்கள். ஊழல், இலஞ்சம் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை. அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்.

இன்றைய திராவிட அரசியல்வாதிகளிடம் இருப்பதைப் போல ஆடம்பரம், ஊழல், இலஞ்சம், சுரண்டல் என்று எந்தத் தீயக் குணங்களும் தன்னை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்ட ஒரு நெருப்பு மனிதர்.

அவருடைய நினைவைப் போற்றுவதன் மூலம், நம் இன முன்னோர்களில் இப்படி ஒரு்பெருமகன் வாழ்ந்தார் என்று வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகள் அறிய முடியும். அதனை தெரியப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை.

பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்படி நேர்மையின் நேர்வடிவமாக வாழ்ந்த நம்முடைய போற்றுதற்குரிய தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை. அதனை அடியொற்றி, நாம் தமிழர் பிள்ளைகள் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம். அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையும். தூய்மையுமாக இருந்து அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை அவர் பிறந்த இந்நன்னாளில் ஏற்போம்.

தூய அரசியலின் நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#தாத்தாகக்கன் #பெருமகன் #நேர்மை #எளிமை #தூய்மை #அரசியல் #நாம்தமிழர் #சீமான் #நாம்தமிழர்கட்சி #காமராசர் #கக்கன் #தூயஅரசியல்

#ThathaKakkan #KakkanTheLegend #TamilPride #TrueLeadership #CorruptionFree #Inspiration #PurePolitics #NamTamilar #Seeman #Kamarajar #Integrity #SimpleLifeBigMessage #RoleModel #TamilIcons

முந்தைய செய்திசீமான் அவர்கள் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம்!
அடுத்த செய்திஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் – சீமான் சந்திப்பு!