முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழைக்கும் மக்கள் யாவரும் உயர்வு பெற்றிட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்!…

0

உழைக்கும் மக்கள் யாவரும் உயர்வு பெற்றிட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்!

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" என்று தமிழ்மறை கூறும் அருள்மொழிக்கேற்ப, தங்களின் ஓய்வறியா ஒப்பற்ற உழைப்பால் உலகைச் செதுக்கி சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே நன்நாளாகும்.

‘சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே – முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே!
உங்கள் வேரினிலே!‘
எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் பாக்களுக்கேற்ப, உரிமைகளுக்காக உதிரம் சிந்திய உழைப்பாளர்களைப் போற்றும் திருநாள் இந்நாளாகும்.

“உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு தேசத்தின் ஜீவாதாரசக்தி” என உழைப்பின் உன்னதத்தைப் போற்றுகிறார் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் – உன்
கைகளில் பூமி சுழன்று வரும்

தோள்கள் உனது தொழிற்சாலை – நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனி
தொடு வானம்தான் உன் எல்லை

என்ற கவிஞர் தாரா பாரதியின் முத்திரை வரிகளுக்குக்கேற்ப உழைக்கும் மக்களின் ஈடு இணையற்ற கடும் உழைப்பால் உருவானதே நவீன வசதிகளுடன் நாம் வாழும் இவ்வுலகம்!ஆனால், நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக உலக மாற்றத்தின் ஒவ்வொரு வேரிலும் ரத்தம் சொறிந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஏழ்மை வறுமையிலேயே இருக்கிறது என்பதுதான் வலிமிகுந்த உண்மை!

”பாலின்றி பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாமழுதோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்
காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய ஐயா ஜீவாவின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்கக் கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

கரடு முரடாகக் கிடந்த உலகை வாழுமிடமாக வடிவமைத்து, விவசாயம் தொடங்கி வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளமார அர்ப்பணித்து, உலக வளர்ச்சியை தங்களின் முதுகில் தூக்கிச் சுமக்கும் தொழிலாளர் பெருமக்களுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம், அவர்களுக்கான முழுமையான உரிமைகளை எந்த அரசும் இன்றளவும் தந்ததில்லை. உழைப்பாளர் பெயரால் உருவான அரசுகளும், ஆட்சியாளர்களும்கூட அதற்கு விதிவிலக்கல்ல;

காலங்காலமாக நம்மை தூக்கிச் சுமந்த தோள்களைத் தூக்கியெறியும் நன்றி உணர்வற்ற உள்ளங்களாகவே நம்மில் பலரும் நடந்து கொள்கிறோம்.

அவற்றையெல்லாம் மாற்றி, தொழிலாளர் பெருமக்கள் தங்கள் வாழ்வில் மேன்மையும், வளமையும் பெற்றிட இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் தொழிலாளர் வர்க்கத்தை மேம்படுத்த ஆளுகின்ற அரசுகள் முன்வர வேண்டும்!

தொழிலாளர் வர்க்கம் தங்களுக்குள் ஒன்றுபட்டு உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் மகத்தான ஆற்றலாக மேம்பட என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

#MayDay2025 #LabourDay2025

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு பவானி மண்டலம் (பவானி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குனங்குளம்…