ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? பெரியார் மண்ணா? – சீமான் கடும் கண்டனம்

13

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பி மணிகண்டன் சாதிவெறியர்களால் காவல்துறையின் முன்னிலையிலேயே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பேரதிர்ச்சி தருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக அமைதியைக் காக்க வேண்டிய காவல்துறையினரே சாதியவாதிகளுக்குத் துணைபோயிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தம்பி மணிகண்டனின் படுகொலை பெரம்பலூர் மாவட்டம் முழுமைக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொலையாளிகளை இன்னும் கைதுசெய்யாதிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் ஆதித்தொல் குடிமக்கள் மக்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும், படுகொலைகளும் அதிகரித்திருக்கின்றன. வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீர்த்தொட்டியில் கலந்த வன்கொடுமையில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ஆதிக்குடிகள் நுழைய முடியாத இழிநிலை உள்ளது. பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக சாதிய ஆணவக்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. தற்போது காவல்துறையின் துணையோடு அவர்களின் முன்னிலையிலேயே ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் படுகொலை செய்யப்பட்டிருப்பது சாதியக் கோரத்தின் உச்சமாகும். காவல்துறை அமைச்சகத்தைத் தன்வசம் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் என்ன செய்கிறார்? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? ஆதிக்குடி மக்கள் மீதான கோரத்தாக்குதல்களை வேடிக்கைப் பார்ப்பதுதான் பெரியார் மண்ணா?

சமூக நீதியெனப் பேசாத ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என நாளும் மேடைகளில் வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவதற்கு ஏன் தயங்குகிறது? இதுதான் உங்களது சாதி ஒழிப்பு நடவடிக்கையா? அடையாள அரசியல் செய்து, அடித்தட்டு உழைக்கும் மக்களை ஏமாற்ற வெட்கமாக இல்லையா? எத்தனைக்காலத்துக்கு ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்? பெரியார் எனும் பிம்பத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நீங்கள் போடும் சாதிய ஒழிப்பு நாடகமும், உங்களது முற்போக்கு முகமூடியும் கிழிந்து தொங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, தம்பி மணிகண்டனைப் படுகொலை செய்த கொலையாளிகளும், அக்கொலைக்குத் துணையாக இருந்த காவல்துறையினரும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், தம்பி மணிகண்டனின் குடும்பத்தாருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

https://x.com/NaamTamilarOrg/status/1881288875286659462

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்