'இந்து தமிழ் திசை' நாளிதழின் தலைமைச் செய்தியாளர் அன்புத்தம்பி ச.கல்யாண சுந்தரம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
மயிலாடுதுறை மாவட்டம், அண்ணா நகர், முல்லை தெருவைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் அவர்கள் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தியாளராகப் பணியாற்றி, தினமணி மற்றும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ்களில் தலைமைச் செய்தியாளராகப் பணிபுரிந்தவர்.
காவிரி சமவெளி மாவட்டங்களில் காவிரி நீர் பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த தம்பி கல்யாண சுந்தரம் அவர்களின் அரும்பணி என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
இளம் செய்தியாளர்களுக்கு நல் வழிகாட்டியாகத் திகழ்ந்த தம்பி கல்யாண சுந்தரம் அவர்களின் மறைவு பத்திரிகைத்துறைக்குப் பேரிழப்பாகும்.
தம்பியின் மறைவால் துயருற்றுள்ள அவரது இணையர் ஆசிரியை
ஜீவா அவர்களுக்கும், அவரது அன்புமகன் இறை மற்றும் அன்புமகள்
செண்பகா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ச.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



