ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கலை பத்தில் தலை சிறந்தவன்
திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் இராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து நம்பவியலாத ஆரிய புராண கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை இராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் இராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு, இராவணப்பெரும்பாட்டனை அவமதிக்கும் கொடுஞ்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தங்களது நடவடிக்கை உலகத்தமிழர் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தவறான செயல் என்பதை இராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1847168918978281645
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி