தமிழின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா இராசேந்திர சோழன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வட தமிழ்நாட்டில் வாழும் பாட்டாளி மக்களின் எளிமையான வாழ்வியலை தமது இயல்பான எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்திய ஐயா இராசேந்திர சோழன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
கோணல் வடிவங்கள்’, 'புற்றிலுறையும் பாம்புகள்’, 'தனலட்சுமியோட ரவ நேரம்' போன்ற புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியதோடு, சிறகுகள் முளைத்து, பதியம் உள்ளிட்ட நாவல்கள், அரசியல்: தமிழ்த்தேசியமும் தன்னுரிமையும்,
தமிழகம்: தேசம், மொழி, இனம்,
தேசியம் உள்ளிட்ட கட்டுரைகள், நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களில் தம்மை கரைத்துக்கொண்டு தமிழ்த் தொண்டாற்றிய புகழுக்குரியவர்.
தமிழ் மண்ணின் உரிமைக்காக வெளிவந்த இதழ் மண் மொழியின் ஆசிரியராகவும் திகழ்ந்த ஐயா அவர்களின் எழுத்தாக்கத்தில் உருவான புதிய கல்விக்கொள்கையின் பாதிப்புகள் பற்றிய 'நாளை வரும் வெள்ளம்', நெருக்கடிநிலை அடக்குமுறைகளைப் பற்றிய 'விசாரணை' உள்ளிட்ட நாடகங்கள் ஆகச்சிறந்த அரசியல் பாடங்களாகும்.
ஐயா இராசேந்திர சோழன் அவர்கள் பொதுவுடைமை தத்துவத்தில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கியபோதும், பின்னர் வரலாற்றுப் பெரும் புரிதல் ஏற்பட்டு தமிழ்த்தேசியத்
தடம் பற்றிய பெருமைக்குரியவர்,
"மார்க்ஸியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறையப் பேரிடம் உள்ளது. அப்படி இல்லை, தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியது தான் மார்க்ஸியம்" என்ற அவரது புகழ்பெற்ற வரிகள் தமிழ்நாட்டு அரசியலில் தத்துவ தெளிவை ஏற்படுத்தும் ஆகச்சிறந்த கோட்பாடாகும்.
நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த அரசியல் கருத்தரங்கிலும் பங்கேற்று தமிழ்த்தேசியத்திற்கு வலுசேர்த்த பெருந்தகை.
ஐயா இராசேந்திர சோழன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி தமிழ்த்தேசிய அரசியலுக்கும் நிகழ்ந்துள்ள பேரிழப்பகும்.
காலத்தால் அழியாத அவரது படைப்புகள் ஐயா அவர்களின் புகழை தமிழர் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இலக்கியம் மற்றும் அரசியல் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராசேந்திர சோழன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



