மண்
உயிர்களின் கருப்பை நான். சமாதியும் நானே!
புற்கள் என் புளகம். பூக்கள் என் கனவுகள்!
குறிஞ்சி என் கொங்கை!
முல்லை என் கூந்தல்!
மருதம் என் மணிக்கரம்!
நெய்தல் என் சேலை!
பாலை என் வேனிற்கால வியாதி!
வசந்தத்தில் நான் பூப்படைகிறேன்!
கார்காலத்தில் கலவி செய்கிறேன்!
இலையுதிர் காலத்தில் விரதம் இருக்கிறேன்!
உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள்.
நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்!
பெற்றவளே பிணம் என்று உங்களை ஒதுக்கும்போதும், என் வயிறு உங்களை ஏற்றுக்கொள்கிறது!
உங்களை முதலில் என் மார்பில் தவழவிட்டு, இறுதியில் என் வயிற்றில் ஏந்தும் உங்கள் தாயின் எதிர்ப்பதம்!
ஒரே நேரத்தில் நான் உங்களுக்கு சமாதியாகவும், விதைகளுக்குக் கருப்பையாகவும் இருக்கிறேன்!
நான் ஆக்குகிறேன்!
காக்கிறேன்!
அழிக்கிறேன்!
ஆக்குவதற்காகவே, அழிக்கிறேன்!
கடவுளுக்கு நான் காரியதரிசி!
உங்கள் தொட்டில் நான்!
ஊட்டும் வட்டில் நான்!
கடைசியில் தூங்கும் கட்டிலும் நானே!
…
– கவிக்கோ அப்துல் ரகுமான்


