ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை மறுநியமன போட்டித்தேர்வுகள் இன்றி நேரடியாகப் பணியமர்த்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

221

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை மறுநியமன போட்டித்தேர்வுகள் இன்றி நேரடியாகப் பணியமர்த்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய அவலநிலை நீடிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நியமனத்தேர்வு முறையை ரத்து செய்யாமல் காலம் கடத்தும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000 ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு இதுவரை பணிநியமனம் செய்யவில்லை. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த 10 ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப்பெறாததால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களின் முந்தைய பணியையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, இருளில் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 2018ஆம் ஆண்டு சூலை மாதம் அதிமுக அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அவ்வரசாணையை அப்போதே நான் வன்மையாகக் கண்டித்ததோடு, அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினேன். ஒரு பணிக்காக இருமுறை தேர்வு எழுத வேண்டிய கொடுமையை எதிர்த்து, ஆசிரியர்கள் நடத்திய தொடர்ப் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டும் ஆதரவு தெரிவித்தேன். ஆனால் கடும் எதிர்ப்பினையும் மீறி முந்தைய அதிமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைத்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆசிரியப்பெருமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை நியாயமான அக்கோரிக்கையை நிறைவேற்றாது காலங்கடத்துவது நம்பி வாக்களித்த ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும் அறிவுசார் தலைமுறையை உருவாக்கும் அறப்பணி புரியும் ஆசிரியர் பெருமக்களை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளி, முந்தைய அதிமுக அரசு கடைப்பிடித்த ஆசிரியர்களுக்கு எதிரானப்போக்கினை திமுக அரசும் தொடர்வது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்வதோடு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை திமுக அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பினை மீண்டும் பழையபடி 57 ஆக உயர்த்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெருமக்கள் சென்னை – டிபிஐ வளாகத்தில் முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவினை அளித்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தோள்கொடுத்துத் துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.

முந்தைய செய்திதமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும் என்பது மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள மற்றுமொரு பேரிடி! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா? – சீமான் கடும் கண்டனம்