மேல்மா சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் திரள போராட்டம் – சீமான் பங்கேற்பு

155

16-10-2022 | மேல்மா சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் திரள போராட்டம் – சீமான் பங்கேற்பு 

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் தொழில் வளாகம் அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் – அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தை சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 பஞ்சாயத்திற்கு உட்பட்ட 3174 ஏக்கர் வேளாண் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து விவசாயிகள், விவசாய இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், 16-10-2022 அன்று, மேல்மா கூட்டுச்சாலை அருகில் விவசாய இயக்கங்கள் இணைந்து பேரெழுச்சியாக நடத்திய மாபெரும் விவசாயிகள் திரள் போராட்டத்தில். விவசாய இயக்கங்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

“இத்தகையப் போராட்டங்கள் எல்லாம் எங்களுடைய உணர்வோடு கலந்த போராட்டங்களே. நம்முடைய நாட்டில் விளைநிலங்களின் வளம் மிகவும் குறைவு. அந்த குறைந்த விளைநிலங்களையும் தொழிற்சாலைகள் அமைக்க, விமான நிலையங்கள் அமைக்க, 8 வழிச்சாலை அமைக்க 1000 ஏக்கர், 2000 ஏக்கர் என்று பறித்துக் கொண்டால் உணவுத் தேவைக்கு நாம் என்ன செய்வது?” என்று கூறினார்.

“தொழிற்சாலைகள் அமைத்தால் என்ன கிடைக்கும்? வேலை கிடைக்கும். வேலை கிடைத்தால் என்ன கிடைக்கும்? நல்ல சம்பளம் கிடைக்கும். சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? நன்றாக சாப்பிட்டு வாழலாம். ஆனால், அந்த சாப்பாடு எங்கிருந்து வரும்? விளைநிலங்கள் அழிக்கப்பட்டால், உணவு உற்பத்தி எப்படி நடக்கும்? ‘பட்டினிக் குறியீடு’ என்று உலக நாடுகளை வரிசைப்படுத்தி ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 121 நாடுகளில், 107வது இடத்தில் இந்திய நாடு இருக்கிறது. அது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பஞ்சப் பிரதேசமாக, மற்றுமொரு சோமாலியாவாக, எத்தியோப்பியாவாக, நைஜீரியாவாக இந்த நாடு மாறிக்கொண்டு வருகிறது என்பதைத்தான். அருகிலுள்ள இலங்கையில் நடந்த பொருளாதார வீழ்ச்சி இங்கும் நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் பயணிக்கும்போது கூட 8 வழிச்சாலைகள் இல்லை. உள்நாட்டிற்குள் எதற்கு 8 வழிச்சாலை? அப்படி அகலமான சாலைகளைப் போடவேண்டுமென்றால், வளர்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளைப் போல, பெரிய தூண்களை எழுப்பி விளைநிலங்களை, காடுகளை, மலைகளை பாதிக்காமல் 8 அல்ல 18 வழிச்சாலை கூட அமைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எந்தக் கேள்வியும் எழுப்பப் போவதில்லை. அதைவிடுத்து எங்கள் விளைநிலங்களைப் பறித்து, நீர்நிலைகளை அழித்து, மலைகளைத் தகர்த்து சாலைகளை அமைப்பதால் என்ன நன்மை விளையும்? ‘ஜீ ஸ்கொயர்’ நிறுவனம் நாடெங்கிலும் 1000 கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி வைத்துள்ளது. அதில் இந்த சிப்காட் தொழில் நிறுவனங்களைக் கட்டுங்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.

“காட்டைத் திருத்தி, மேட்டைத் திருத்தி தரிசு நிலங்களை விளைநிலங்களாக உருவாக்கப் பல தலைமுறைகள் நாங்கள் பலியாகியிருக்கிறோம். எங்கள் பாட்டன், முப்பாட்டன் இரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்துள்ளார்கள். எல்லா நிலத்திலும் விதையைப் போட்டால் பயிர் விளையாது. நிலத்தில் வளம் இருக்க வேண்டும். இந்த மேல்மா சிப்காட் தான் முதல் சிப்காட் தொழிற்சாலையா? இதற்கு முன்னால் அமைத்த பல சிப்காட் தொழிற்சாலைகளால் விளைந்த நன்மைகள் என்ன? அவைகளால் எற்பட்ட வளர்ச்சி என்ன? தொழிற்சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சி என்பவர்கள் என்னோடு விவாதிக்கத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான் அவர்கள், “கல்வி, மருத்துவம் எல்லாம் தனியார் தான் தரமாக வழங்குகிறது. சாலை போடுதல், பராமரித்தல் தனியார் தான். மின் உற்பத்தி விநியோகமும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது. பிறகு அரசின் வேலை தான் என்ன? நீங்கள் வளர்ச்சி என்று கட்டமைக்க விரும்புவது, நாங்கள் பட்டினி கிடந்து இறந்து போனால், எங்கள் பிணத்தைக் கட்டையைக் கொண்டு எரிக்காமல், மின்சாரத்தில் எரிப்பது வளரச்சி. தொலைக்காட்சியைத் திறந்தால், நோயுற்ற-உடல் நலிவுற்றுள்ள  பிள்ளைகளைக் காப்பாற்ற தாய்மார்கள் கையேந்தி நிற்கும் விளம்பர காட்சிகள் தான் வருகிறது. தேசத்தின் பிஞ்சுகள் உணவில்லாமல் உறங்கப்போகிறார்கள், அதனால் அவர்களுக்கு ஏதாவது நன்கொடை கொடுத்து உதவுங்கள் என்று கையேந்தி நிற்க வைத்துவிட்டு, பிஞ்சு குழந்தைகளைப் பட்டினி போட்டுவிட்டு, என்ன வளர்ச்சியைக் கட்டமைக்கின்றீர்கள்? விளைச்சலுக்குப் பயன்படாத இடத்தில் சென்று தொழிற்சாலைகளைக் கட்டுங்கள். நாங்கள் போராட மாட்டோம். நாடெங்கிலும் இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளது. நான் இருக்கும்வரை இது எதுவும் நடக்காது” என்று கூறினார்.

மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “இப்படித்தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்க, எங்கள் தாத்தன் ஜம்புலிங்க முதலியார் அவர்கள், தன் சொந்த நிலம் 500 ஏக்கரைக் கொடுத்தார். தற்போது 299 பேர் வேலைக்கு ஆள் எடுத்துள்ளார்கள். அதில் தமிழர்கள் நாங்கள் ஒருவர் கூட இல்லை. நிலத்தைக் கொடுத்துவிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வீட்டை இழந்து நடுத்தெருவில் இருக்கிறார்கள் என் மக்கள். ஓசூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிய ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 800 க்கும் மேற்பட்ட பெண்களை சிறப்பு தொடர்வண்டியில் அழைத்து வந்திருக்கிறார்கள். உண்மை நிலை இப்படியிருக்க தொழிற்சாலைகள் வந்தால் நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று. எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டு தான் எங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்களா? நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்போம். காற்று, நிலம், நீர் நஞ்சாகாமல் காப்போம். படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலையை எங்களால் கொடுக்க முடியும். எங்கள் ஆட்சியின் செயற்பாட்டு வரைவைப்  படித்து பாருங்கள்” என்று தெரிவித்தார்.

“இன்று நடக்கும் இந்தி திணிப்பு ஆட்டமெல்லாம், இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும்வரை தான் நடக்கும். நான் தமிழக முதல்வராக இருந்தால், தமிழ் நாட்டில் ஒரு இடத்தில் கூட இந்தி இருக்காது. திமுக இளைஞர் அணி, மாணவர் அணி இணைந்து நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எல்லாம் வெறும் நாடகம் தான். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கூட இந்தி இருக்கிறது. கேந்த்ரா வித்யாலயா, நவோதையா, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், அதில் என் தாய் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வாய்ப்பிருக்கிறதா? எங்கள் நிலத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது, ஆனால் அதில் என் தாய் மொழியைப் படிக்க முடியாதென்றால், அந்தப் பள்ளிக்கூடம் இங்கு எதற்கு? எங்கள் தாய் நிலத்தில், எங்கள் தாய் மொழியில் தான் நாங்கள் படிப்போம். அப்படி ஒரு காலம் வரும், அதை நாங்கள் உருவாக்குவோம்” என்று கூறினார்.

“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அவர்கள் விரும்பும் பாதையில் பேரணி நடத்த அனுமதி அளித்த திமுக அரசு, இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி நடத்த அனுமதி கேட்டால் மறுக்கிறது. வேண்டுமென்றால் ஆள் நடமாட்டமே இல்லாத  சந்தில் பேரணி நடத்திக்கொள்ள சொல்கிறது. இவ்வளவு தான் இவர்களின் இந்தி எதிர்ப்பு என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

 

 

முந்தைய செய்திதமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தியமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்