சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? – சீமான் கண்டனம்

163

சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? – சீமான் கண்டனம்

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் ஆதித்தொல்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, கண்ணையா எனும் முதியவர் தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். சமூக நீதி ஆட்சியென வெட்கமின்றி சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, தனிப்பெரு முதலாளிகளின் தேவைகளுக்காக, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, அவர்களை சென்னையைவிட்டே அப்புறப்படுத்தும் திமுக அரசின் கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை எனும் பெருநகரத்தின் உட்கட்டுமானத்திற்கும், மேம்பாட்டுக்கும் வியர்வை சிந்தி உழைத்த மண்ணின் பூர்வக்குடிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, மாநகரைவிட்டே வெளியேற்றி கண்ணகி நகருக்கும், செம்மஞ்சேரிக்கும், கல்லுக்குட்டைக்கும், பெரும்பாக்கத்துக்கும் துரத்தியடிக்கும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களும், தங்கும் விடுதிகளும், கல்விக்கூடங்களும், வணிகத்தலங்களும் ஏன் உறுத்தலாகத் தெரிவதில்லை? ஆக்கிரமிப்பென்றாலே, குடிசைகள்தானென முடிவுசெய்து, அவர்களது வாழ்விடங்களை இடித்துத்தரைமட்டமாக்கி, வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றுவதுதான் சமூக நீதியா? காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு!

ஆகவே, சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தீக்குளித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் முதியவர் கண்ணையாவுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையும், 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி