உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

144

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கெடுக்கிறேன். உக்ரைன் நாட்டின் கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷிய இராணுவம் நடத்தி வரும் கோரத்தாக்குதலினால் அந்நகரங்களிலுள்ள இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன. இதனால், இந்தியாவிலுள்ள அவர்களது பெற்றோரும், உறவினர்களும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வந்து, தாயகத்திலுள்ள அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசின் தார்மீகக்கடமையாகும்.

மக்களாட்சித்தத்துவத்தை ஏற்றுக்கொண்ட உலகின் மிகப்பெரும் நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் கல்வி என்பது விற்பனைப்பண்டமாக ஆக்கப்பட்டு, பெரும் வர்த்தக நிறுவனங்களாகக் கல்வி நிறுவனங்கள் உருமாற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையிருப்பதாலேயே கல்வி வாய்ப்புக்காக அந்நிய நாடுகளுக்கு இந்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலப் பயணப்படுகிறார்கள் என்பதும், விடுதலைபெற்று 70 ஆண்டுகளைக் கடந்தும் கல்வியறிவில் தன்னிறைவுப் பெறாதிருக்கிற இந்நாட்டின் கொடுஞ்சூழலும், சொந்த நாட்டு மக்கள் விரும்பியக் கல்வியைப் பயிலப் பொருளாதாரம் இந்தியாவில் பெரும் தடைக்கற்களாக இருக்கிற துயர நிலையும் ஏற்கவே முடியாத சனநாயகத்துரோகமாகும். இதனாலேயே, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் கல்வி பயிலச் செல்கின்றனர். அந்நாட்டில் வெளிநாட்டிலிருந்து கல்வி பயிலச்செல்லும் மாணவர்களில் 24 விழுக்காட்டினர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். தற்போதையப் போர்ச்சூழலில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைக்காது இந்தியா நடுவு நிலை வகித்ததால், அந்நாட்டிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும், மிகச்சொற்ப எண்ணிக்கையில்தான் மாணவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்; பெருவாரியான மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லையென்றும் வரும் செய்திகள் பெரும் அச்சத்தைத் தருகின்றன.

ஆகவே, உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரணமானப் போர்ச்சூழலைக் கருத்தில்கொண்டு, பல்லாயிரக்கணக்கில் அங்குள்ள இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்து அவர்களைப் பாதுகாப்பாக நாடுதிரும்ப செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி