முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

190

முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது நஞ்சுண்டு உயிரிழந்தார் எனக்காவல்துறை அறிவித்திருப்பது பல்வேறு ஐயங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. முதலில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகவும், பின்னர், தொண்டையில் உணவு சிக்கி இறந்ததாகவும் காவல்துறையினர் கூறிவந்த நிலையில், தற்போது நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. தற்கொலை செய்துகொண்டார் என்பது உண்மையென்றால், அதனைக்கூற இவ்வளவு நாட்கள் எதற்கு? அப்போதே இதனைக் கூறியிருக்கலாமே! அதனைச் செய்யாதது ஏன்? எதற்கு இவ்வளவு நீண்டகால அளவு? கதைபுனைந்து கட்டமைக்கவா? இதுவெல்லாம்தான் பெரும் ஐயத்திற்கு வலுசேர்க்கிறது.

தற்கொலை செய்துகொண்டதாகவே வைத்துக்கொண்டாலும், நல்ல உடல்நலத்தோடும், உளவியல் நலத்தோடும் இருந்த தம்பி மணிகண்டன் ஒரே நாள் காவல்துறையின் விசாரணைக்குப்பிறகு, மனஉளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்கிற முடிவுக்குச் செல்வதற்குக் காரணமென்ன? காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகுதான், தற்கொலை முடிவை எடுத்தாரென்றால், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது யார்? அவரது மரணத்திற்குப் பொறுப்பு யார்? காவல்துறையும், அரசும்தானே! அதனை மறுத்து, தங்களது பொறுப்பைத் தட்டிக்கழித்து, இம்மரணத்தை முற்றாகக் கடந்துசெல்லும் அரசதிகாரத்தின் போக்கு எந்தவிதத்தில் நியாயம்? கடந்த அதிமுக ஆட்சியில், காவல்துறையினரால் நிகழ்ந்த சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலையின்போது அதற்கு வன்மையானக் கண்டனம் தெரிவித்துப் போராடிய திமுக, அவர்களது ஆட்சியில் நடந்த மாணவரின் மர்ம மரணத்தையும், காவல்துறையினரின் மீது எழுந்த சந்தேகங்களையும் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்துவது எந்தவிதத்தில் சரியான அணுகுமுறையாக இருக்கும்? காவல்துறை அமைச்சகத்தைத் தன்வசம் கொண்டிருக்கிற ஐயா ஸ்டாலின் அவர்கள் இதுவரை இச்சம்பவம் குறித்து வாய்திறக்காது அமைதியைக் கடைப்பிடிப்பதேன்? குறைந்தது, இறந்துபோன மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கக்கூட முதல்வரைத் தடுப்பது எது? அதிகாரம் தந்த மமதையும், பதவி தந்தத் தான்மையும் தாண்டி வேறென்ன? ஆகவே, காவல்துறையினர் மீதே சந்தேகம் எழுகிற இச்சூழலில் அவர்களைக் கொண்டே இவ்வழக்கை நடத்தி முடிப்பது முறையானதாக இருக்காது.

எனவே, மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், மாணவர் மணிகண்டன் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
அடுத்த செய்திபொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்