மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் தேசிய மருத்துவர்கள் நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும் காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகிறது.
தொடக்கக் காலம் முதல் இவ்வுலகில் ஏற்பட்ட பல பெருந்தொற்று நோய்களில் இருந்தும் உயிர்களைக் காத்து வரும் மருத்துவத்துறையினர் தான், பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடுந்தொற்று வேகமாகப் பரவி வரும் தற்காலச் சூழலிலும் நோய்க்குள்ளாகிய பல கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது காலம் உள்ளவரை மானுட சமூகத்தால் நன்றி கூறத்தக்கது.
அவ்வகையில் இந்தியா முழுவதும் மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்று ( சூலை 1), கொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி, முன்களப் பணியாளர்களில் முதன்மையானவர்களாக நின்று மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அதேவேளையில், உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான ஒன்றிய அரசின் மருத்துவர்களுக்கு இணையான உரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் மற்றும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்றஅறிவிப்பை வெளியிடவேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர முன் வரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி