உழைப்பால் உலகையே உருவாக்கிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து

245

அறிக்கை: தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகையே உருவாக்கிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி

தங்களது உதிரத்தை வியர்வையாகச் சிந்தி ஒவ்வொரு நாளும் பாடுபட்டு உழைத்து, தங்களது அளப்பரிய உழைப்பினால் காலம் காலமாக உலகத்தை உருவாக்கி வரும் தொழிலாளர்களின் தினமான மே 1 உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் ஏராளமான தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். 1890ஆம் ஆண்டு அமெரிக்காவில் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அப்போதைய அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்கும் வண்ணம் ஏராளமானத் தொழிலாளர்களை கொன்று குவித்தது. அமெரிக்கத் தொழிலாளர்களை உள்ளடக்கியக் கூட்டமைப்பு இந்த அடக்குமுறைகளை எதிர்த்து மே 1, 1886 அன்று ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்து வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மே 1 சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகத்தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுபோல, உலகம் தழுவி வாழ்கிற தொழிலாளர்களின் துயரங்களைத் தீர்க்க முதலாளிவர்க்க ஆட்சிமுறை பெரும் புரட்சியால் தகர்க்கப்பட்டு பாட்டாளி வர்க்க
ஆட்சிமுறை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாமேதை காரல் மார்க்சு, ‘உலகத்தொழிலாளர்களே! ஒன்றுகூடுங்கள்’ என்று முழங்கினார். அவர் முழங்கியதன் அடிப்படையில் உலகத்தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க எழுச்சியோடு புரட்சி கண்ட தினமாக மே 1 விளங்குகிறது.

இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நமது முன்னோர், தமிழ்த்தேசிய இனத்தின் சமதர்மச்சூரியன் ஐயா சிங்காரவேலர் தலைமையில் சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று சர்வதேச உழைப்பாளர்கள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உழைப்பாளர்கள் இல்லாத தேசம் ஒன்றுமில்லை. அவர்கள் வியர்வை சிந்தாத நிலம் என்ற ஒன்றுமில்லை. அவர்களால்தான் இந்த உலகம் உருவாகியிருக்கிறது. உலகுசெழிக்க உயிர் வருத்தி உழைக்கின்ற உழைப்பாளர் உரிமை காக்கின்ற நாள் மே 1 ஆகும்.
உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் என நம்மை நோக்கி வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக உழைப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் போராட வேண்டும் என்பதைத்தான் தியாகத் திருநாளான மே 1 நமக்கு நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறது.

உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். போராடிப் பெற்ற உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்போம்!

புதியதோர் தேசம் செய்வோம்!

மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, அனைவருக்கும் உழைப்பாளர் தினப் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி