கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப் பாசறை வலியுறுத்தல்

342

கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும்,
மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப் பாசறை வலியுறுத்தல்

மாநிலங்களின் தன்னுரிமையும், தேசிய இனங்களின் மண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் எனும் உயரிய முழக்கம் வலுப்பெற்றுள்ள இக்காலகட்டத்தில் மொழிவாரியானக் கணக்கெடுப்பும், கல்வி நிலையங்களின் சான்றிதழ்களில் தாய்மொழியைக் குறிப்பிடுதலும் இன்றியமையாததாகிறது. ஆனால், தமிழகத்தில் தாய்மொழி என்ற குறிப்பு அரசு ஆவணங்களில் எங்கும் பதியப்படுவதில்லை. இதே நிலைதான், பிற மாநிலங்களிலும் உள்ளதா என அறிய தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முயற்சியில் ஈடுபட்டோம். பிற மாநில அரசுகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாய்மொழியைக் குறிப்பாகக் கொண்ட ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா? மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பப்படிவத்திலோ அல்லது அவர்கள் பள்ளியைவிட்டு வெளியேறும்போது மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி என்ற குறிப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்து மனு தாக்கல் செய்தோம்.

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை தாக்கல் செய்த மனுவிற்குப் பதில் அளித்த ஆந்திரா மற்றும் கேரள அரசுகள், தங்கள் மாநிலத்தில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் பயிற்றுமொழி, முதல் மொழியுடன் கூடுதலாகத் தாய்மொழி என்ற குறிப்பையும் பதிவு செய்கின்றனர். இதற்கு ஆவணமாகத் தத்தம் மாநிலத்தில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழின் மாதிரியையும் அளித்துள்ளனர். இத்தகைய நடைமுறை தமிழ்நாட்டில் இல்லை என்பதை நாம் உணர்ந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வி துறைக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்து ஆந்திரா, கேரள அரசுகளிடம் நாம் பெற்ற பதில்களையும், ஆவணங்களையும் இணைத்து தமிழ்நாட்டில் மட்டும் தாய்மொழி என்ற குறிப்பு ஏன் சேர்க்கப்படுவதில்லை? என்ற கேள்வியை முன்வைத்தோம். இதைக் கவனத்தில் கொண்ட தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் அவர்கள், மனுதாரரால் கொடுக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை சரியானது என்பதை உணர்ந்துத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலகப் பள்ளிக்கல்வித் துறையின் பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளார். மேலும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்யுமாறு அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை, வரும் கல்வி ஆண்டிலிருந்து தாய்மொழி என்ற குறிப்பை மாற்றுச் சான்றிதழ்களில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

 – தமிழ் மீட்சிப் பாசறை