அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! – சீமான் வாழ்த்து

3873

அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! – சீமான் வாழ்த்து

மக்களாட்சியின் மாண்பினை தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் விளங்குகின்ற ஊடகத்துறையில் அறவுணர்வோடும், அர்ப்பணிப்புணர்வோடும்,
பணிபுரியும் அச்சு மற்றும் மின் ஊடகத்துறையினருக்கு ஊடக நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் அடிப்படை உரிமைக்கும், மக்களாட்சியின் அரசியலமைப்பு முறைக்கும் பேராபத்து விளையும் போதெல்லாம் அறத்திலிருந்து நழுவாது நடுநிலையோடு அநீதிக்கும், அதிகார கொடுங்கோன்மைக்கும் எதிராக உள்ளது உள்ளபடி உண்மைகளை வெளிச்சமிடும் எளிய மக்களுக்கான பெருங்குரலாய் ஓயாது ஒலிக்க வேண்டியது ஊடகங்களது முழுமுதற் கடமையாகும்.

அந்த வகையில், இயற்கைப்பேரிடர்களின்போதும், எதிர்பாராத விபத்துகளின் போதும் தன்னலம் கருதாது, இரவுப்பகல் பாராது செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பணியென்பது போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரியதாகும்.
அதுவும், இந்திய ஒன்றியத்தின் சனநாயக முறைக்கே பேராபத்து உருவாகி இருக்கும் தற்காலத்தில் அறம் சார்ந்து நிற்கும் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் தேவையென்பது முன்னில்லாத வகையில் பெருமளவு அதிகரித்துள்ளது. அப்படி நேர்மையோடு செயல்படும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு அவர்களின் பணியைப் பறிப்பதும் தொடர்ந்து அதிகரிப்பது கவலை தருவதாக உள்ளது.

இருந்தபோதிலும், தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படும் இழப்புகளையும், வலிகளையும் தாண்டி , அரசியலமைப்பு மன்றங்களும், ஆணையங்களும், அதிகார இயந்திரமும், நீதிமன்றங்களும்கூட வழிதவறி நடக்கும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எளிய மக்களின் பக்கம் நிற்கும் ஊடகத்துறையினர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அறப்பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களின் பக்கம் அறத்தோடு நிற்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணி சிறக்கட்டும்! ஊடக அறம் வெல்லட்டும்!!

 

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி