குடகனாறு குடிநீர் மற்றும் பாசனத்தேவைக்கு நீரினை தமிழக அரசு உடனடியாகத் திறந்துவிடவேண்டும் – சீமான் கோரிக்கை
திண்டுக்கல் குடகனாறு பாசனத்திற்குத் தேவையான அளவு கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டுமென்று அப்பகுதி நீர்ப்பாசன விவசாயிகள் பலமுறை போராடி வலியுறுத்தியும், அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைக்குச் செவிசாய்க்காதது உணவளிக்கும் உழவர்களை வஞ்சிக்கும் செயலாகும். மேலும் போராடிய வேளாண் பெருமக்ககள் மீதே காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளின் தண்ணீர், ஆத்தூரில் அமைந்துள்ள காமராஜர் அணையில் தேக்கப்படுகிறது. ஒவ்வொராண்டும் அணை நிரம்பும்போதும், குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் காமராஜர் அணைக்குத் தண்ணீர் வரும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டதனால் கடந்த சில ஆண்டுகளாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து, நீர்த்திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் மேற்கு, வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட பாசன கிராமங்களில் வேளாண்மை செய்யப்படாமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டுப் பரவலாக மழைபெய்து அணை நிரம்பியபோதும் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. வேளாண் பெருங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பிறகு திறந்துவிடபட்ட தண்ணீரும் போதுமானதாக இல்லை. ஏற்கனவே கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் வேளாண்பெருமக்கள் வாழ்வா, சாவா நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், இராஜவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, ஆலமரத்துப்பட்டி, ஆத்தூர், அனுமந்தராயன்கோட்டை, வக்கம்பட்டி, அகரம், குட்டத்துப்பட்டி, வீரக்கல், பித்தளைபட்டி, அணைப்பட்டி, ஊராட்சிகளைச் சேர்ந்த குடகனாறு பாசனத்துக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கையில் கருப்புக்கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக வந்துள்ளனர். ஆனால் அவர்களை மனு அளிக்கவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, போராடிய மக்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே தமிழக அரசு குடகனாறு வேளாண்பெருங்குடிமக்களின் அடிப்படை உரிமையும், உயிர்நாடிதேவையுமான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி