தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

71

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி வரும் தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில் மிகவும் எளியப் பின்புலத்தில் வறுமை, ஏழ்மையை எதிர்கொண்டு பசி, பட்டினியோடு காலங்களைக் கடத்தி தந்தையை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காது இலட்சியத்தில் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் தங்கை கோமதி மாரிமுத்து. அவரை விளையாட்டில் தோற்கடிக்க முடியாத நிலையில் திட்டமிட்ட சதிச்செயலாலும், பாகுபாட்டு அரசியலாலும் வீழ்த்தி அவரது பதக்கத்தைப் பறித்து, விளையாடுவதற்கு நான்காண்டுகள் தடைவிதித்திருப்பது வன்மையானக் கனடனத்திற்குரியது. எவ்விதப் பின்புலமுமற்று திறமையை மட்டுமே ஆதாரமாய் கொண்டு மேலெழுந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்கமருந்து பரிசோதனை, பெண்தன்மை குறைபாடு போன்றவற்றைக் கூறித் தடைவிதிப்பதும், பதக்கத்தைப் பறித்து முடக்குவதும் மிக இயல்பானதாய் நடந்தேறுகிறது. புதுக்கோட்டை சாந்தி முதல் கோமதி மாரிமுத்து வரை எளியப் பின்னணியிலிருந்து வரும் திறமைவாய்ந்த வீராங்கனைகளைச் சதிசெய்து ஓரங்கட்டி அவர்களை ஒதுக்கித் தள்ள எண்ணுவது ஏற்கவே முடியா பெருங்கொடுமையாகும்.

2019ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சண்டிகரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தடகள வீரர்களுக்கான தகுதித்தேர்வில் வெற்றிபெற்று, ஆசிய தடகளப்போட்டிக்கு விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தங்கை கோமதி மாரிமுத்து. அங்கு அவரது இரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே, விளையாடவே அனுப்பப்பட்டார். சோதனைகளின் முடிவில் எவ்வித ஊக்கமருந்து பயன்பாடும் இல்லையென்பதை உறுதிசெய்து சான்றளித்து, இந்திய தடகள சம்மேளனத்திற்கு பரிந்துரைத்தது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (National Anti-Doping Agency). அதன்பிறகே, ஏப்ரல் மாதம் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து. வென்றபிறகு அங்கும் ஒரு இரத்தமாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அச்சோதனையை மேற்கொண்ட உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (World Anti-Doping Agency), ஊக்கமருந்து பயன்பாடு இருப்பதாகக்கூறி சோதனை முடிவை மின்னஞ்சலில் அனுப்பியது. இம்முடிவு வருவதற்கு முன்பே, பின்லாந்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்வதற்காக கோமதி மாரிமுத்துவை பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைத்தது இந்திய தடகள சம்மேளனம். அதற்கானப் பணிகளில் கோமதி மாரிமுத்து இருக்கும்வேளையில் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்து குறிப்பிட்ட காலக்கெடு அளித்து உரிய விளக்கத்தைக் கேட்டு நேர்நிற்கக் கோரியது. சோதனை ‘ஏ’ இரத்தமாதிரி முடிவுகள் ஊக்கமருந்து இருந்ததென நேர்மறையாக வந்தபிறகு, சோதனை ‘பி’ இரத்தமாதிரி முடிவுகளையும் ஆய்வுக்குட்படுத்த அனுமதிக்கப்பட்டு, அச்சோதனைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் கோமதி மாரிமுத்து. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் இச்சோதனை முடிவுகளை வெளியிட்டப் பிறகு, அதற்கு முன்பே வெளியிடப்பட்டது போல போலியாக ஒரு முன்தேதியிட்டு, ஊக்கமருந்து பயன்பாடு இருந்ததெனக் கூறி ஒரு சான்றிதழ் கடிதத்தை அனுப்பியது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் சோதனை முடிவுகளைப் பிரதிபலிப்பது போலவே முடிவுகளை வெளியிட்டு, அதனை முன்பே அறிவித்தது போல போலித்தனமாக செய்து கடிதத்தை அனுப்பியிருப்பதன் மூலம் இதனுள் இருக்கும் மோசடித்தனத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறுதியில், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் ‘பி’ மாதிரி முடிவுகளும், தோகாவில் செய்யப்பட்ட சோதனைகளின் ‘பி’ மாதிரி முடிவுகளும் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கவே இப்போது கோமதி மாரிமுத்துவின் பதக்கம் பறிக்கப்பட்டு, விளையாடுவதற்கு நான்காண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மோசடித்தனத்தாலும், இனப்பாகுபாட்டுப் பார்வையாலும் தங்கை கோமதி மாரிமுத்துவைத் திட்டமிட்டு ஓரங்கட்டியிருக்கிறார்கள் என்பதே மறுக்கவியலா உண்மை. இந்தியாவில் செய்யப்பட்ட சோதனை முடிவுகளிலேயே ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது முன்பே தெரிய வந்ததென்றால், எதனடிப்படையில் தோகாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டிக்கும், பின்லாந்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வுசெய்தார்கள்? எனும் தங்கை கோமதி மாரிமுத்துவின் தார்மீகக்கேள்விக்கு எவரிடத்திலும் பதிலில்லை. அளப்பெரும் ஆற்றலும், அபரிமிதத் திறமையும் கொண்ட தங்கை மாரிமுத்துவை இவ்வாறு மொத்தமாய் முடக்கிப்போட்டது மிகப்பெரும் அநீதியாகும்!

ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகப் போராடி வரும் தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு பக்கபலமாக நின்று அவர் மீண்டுவர உதவ வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும். உலகமெங்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு விளையாட்டு வீரர்கள் சிக்குண்டு நிற்கிறபோதெல்லாம் அந்நாட்டு அரசுகள் அவ்விளையாட்டு வீரர்கள் பக்கமே நிற்கிறது. அதுவே அரசிற்குரிய அறம். அதனடிப்படையில் தங்கை கோமதி மாரிமுத்து தன் மீதான குற்றச்சாட்டை முறியடிக்கச் சட்டப்போராட்டம் செய்யவும், அவருக்கு ஊன்றுகோலாக உடன்நிற்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுன்னெச்சரிக்கை பலகை வைக்க கோரி மணு அளித்தல் – கோவில்பட்டி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி