சாத்தான்குளம் படுகொலை! – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்!

110

அறிக்கை: சாத்தான்குளம் படுகொலை! – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்! | நாம் தமிழர் கட்சி

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது எதனால்?

இரு உயிர்களையும் ஒருசேர இழந்துவிட்டு ஜெயராஜின் குடும்பமே மொத்தமாய் நிலைகுலைந்து, நிராதரவற்று நிற்கிற நிலையிலும்கூட, இதேநிலை இன்னொரு குடும்பத்திற்கு வராமலிருக்க வேண்டும்; அதற்காகவாவது கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டுமெனும் அவர்களின் மிக நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்க தமிழக அரசு மறுப்பதேன்? அப்படியெனில், அவர்கள் சாகடிக்கப்பட்டதை நியாயப்படுத்த முயல்கிறதா தமிழக அரசு? அவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் நிதியுதவியே இறந்துபோன இரு உயிர்களுக்கும் ஒப்பானதென்று எண்ணுகிறதா?

இருவரின் உடற்கூறாய்வு முடிந்து அதன் முடிவு வெளிவருவதற்குள்ளாகவே, அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்துபோனார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரம் அவசரமாக அறிக்கை வெளியிட்டது எதற்காக? எதனடிப்படையில் அவர்கள் மரணம் குறித்த முடிவுக்கு முதல்வர் வந்தார்? உடற்கூறாய்வு அறிக்கைக்கு முன்பே, முந்திக்கொண்டு முதல்வர் வெளியிட்ட அறிக்கை வெளிப்படையாக நிகழ்ந்தேறும் அதிகார அத்துமீறல் இல்லையா?

‘பென்னிக்ஸ் தரையில் உருண்டு புரண்டததால்தான் உடலில் காயம் ஏற்பட்டது’ எனும் காவல்துறையினரின் பொய்யுரையையும் ஏற்ற தமிழக அரசு, மூன்று காவலர்களை பணியிடைநீக்கம் செய்தது ஏன்? உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் நிதி அறிவித்தது ஏன்? ஏன் இந்த முரண்? உருண்டுபுரண்டதால் ஏற்பட்ட காயத்தினால் இறந்துபோனார்கள் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற பச்சைத்துரோகச் செயல் இல்லையா?

‘கடை முன்பு கூட்டமாக நின்றார்கள்’, ‘வாக்குவாதம் செய்தார்கள்’, ‘தரையில் உருண்டு புரண்டதில் காயம்’, ‘வாகனத்தில் ஏறும்போது தவறி விழுந்ததில் காயம்’, ‘இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து சென்றனர்’ என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறியவை யாவும் பொய்யாக புனையப்பட்டவை எனத் தற்போது வெளியாகியிருக்கும் சி.சி.டி.வி. காணொளிக்காட்சியில் தெளிவாகியுள்ளது. நேரம் கடந்து வணிகம் செய்தார்களென்றால், அவ்விதி மீறலுக்காக அபராதம் விதித்திருக்கலாம் அல்லது கடையை மூடி சீல் வைத்திருக்கலாம். அதனையெல்லாம்‌ செய்யாது எதனடிப்படையில் கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்கள்? அவ்வாறு அழைத்துச் சென்றவர்களைப் பல மணிநேரம் வன்கொடுமை செய்து சாகடிக்க வேண்டியத் தேவையென்ன?

ஒருவரை குற்றஞ்சாட்டி கைது செய்கிறார்களென்றால், அவர்களை நீதிபதி முன் நிறுத்தி சிறைப்படுத்த வேண்டியதுதானே காவல்துறையின் வேலை, அதனைவிடுத்து, 31 வயது இளைஞர் ஒரே நாளில் உயிரைவிடுகிற அளவுக்குத் அடித்துத் துன்புறுத்த வேண்டிய அவசியமென்ன? ஒரு தவறும் செய்யாத அப்பாவிகளின் ஆசனவாயில் லத்தியைச் சொருகி மனிதவதை செய்து மிருகத்தனமாக காவல்துறையினர் நடந்துகொள்ள வேண்டிய நோக்கமென்ன? இதனை தமிழக அரசு ஏற்கிறதா?

இருவரும் சிறைப்படுத்தப்படுவதற்கு முன்பு அவர்களுக்குச் செய்யப்பட்ட உடற்பரிசோதனையில் இக்காயங்களை மருத்துவர் மறைத்து சான்றிதழ் அளித்தது ஏன்? அம்மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எவ்விதக் குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை, எவ்விதக் குற்றங்களிலும் ஈடுபடாது விதிமீறலுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களை சொந்தப்பிணையில்விட நீதிபதி முனையாதது ஏன்? காவல்துறையின் கொடூரத் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களில் ரத்தம் வழிந்தநிலையில் இருந்த இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டது ஏன்? நேரில் பார்க்காமலே உத்தரவு வழங்கினாரா? எனில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? சிறையிலடைக்கும் முன்னர், நடைபெற்ற உடல்பரிசோதனை குறித்த சிறை அறிக்கையில் இருவரின் பின்பகுதியிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது என்றும், கை-கால்களில் அடிபட்ட வீக்கம் இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமான உடல்நிலையிலிருந்த இருவரையும் சிறைத்துறை எவ்வாறு சிறையிலடைக்க அனுமதித்தது? சிறை அதிகாரியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதற்குப் பின்புலத்தில் நடந்தேறிய அரசியலென்ன?

சாத்தான்குளம் அருகாமையிலேயே சிறைச்சாலையும், கிளைச்சிறையுமிருந்தும் 2 மணிநேரத்திற்கு மேலாகப் பயணம்செய்து தொலைதூரத்திலுள்ள கோவில்பட்டி கிளைச்சிறையிலடைத்தது ஏன்? எதற்காக? கோவில்பட்டி கிளைச்சிறையினருக்கும், சாத்தான்குளம் காவல்துறையினருக்குமான தொடர்பென்ன? முன்னாள் முதல்வரையே கைதுசெய்தாலும் அவர்களை காவல்துறையினரின் வாகனத்தில்தான் ஏற்றித்தான் சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் விதியிருக்கும்போது, ஜெயராஜ் தரப்பினரையே வாகனத்தைக் கொண்டு வரச்செய்து அதிலழைத்துக் கொண்டு செல்ல வேண்டியத் தேவையென்ன?

காவல்துறையினரிடம் தனது தரப்பு நியாயத்தைத் தெரிவித்தாலே, ‘காவல்துறையினரிடமே சட்டம் பேசுகிறாயா?’ என எளிய மக்களிடம் சீறுவதும், பழிவாங்கும் போக்கோடு பொய்வழக்குத் தொடுப்பதும், அலைக்கழித்து அதிகார அத்துமீறல் செய்வதுமான செயல்பாடுகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு முயலாதது ஏன்? சட்டம் பேசுவதே குற்றமா? இல்லை! காவல்துறையினர் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களா? குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் கைகளை காவல்துறையினரே உடைத்துவிட்டு, ‘கழிவறையில் தடுக்கி விழுந்தார்கள்’ என நீதிபதியிடத்திலேயே கட்டுக்கதையை அவிழ்த்துவிடும் கொடுஞ்செயலை தமிழக அரசு இதுவரை கண்டிக்காதது ஏன்? அதன் நீட்சிதானே சாத்தான்குளம் படுகொலை?

காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறியவை யாவும் பொய்யென நிரூபணமாகியிருக்கும் நிலையில்கூட அக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யாது, வழக்கை மொத்தமாய் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டியத் தேவையென்ன? தமிழக அரசுக்கே தமிழக அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? தனக்குக் கீழ் இருக்கும் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டாரா முதல்வர்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – படுகொலை நிகழ்த்தப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் அப்படுகொலை செய்தவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அப்படுகொலைக்கு காரணமான எவர் மீதும் எவ்வித வழக்கும் தொடுக்காதுவிட்டு அதனைக் காலம்கடத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கிடப்பில் போட்டது போல, அக்காவலர்கள் மீது எவ்வித வழக்கும் தொடுக்காது மத்திய புலனாய்வுத் துறைக்கு வழக்கை மாற்றிக் கிடப்பில் போட நினைக்கிறதா தமிழக அரசு?

சாத்தான்குளம் படுகொலை குறித்து காவல்நிலையத்திற்கு விசாரிக்கச்சென்ற நீதித்துறை நடுவரிடம் ஒருமையில் இழிவாக கடைநிலை காவலர் பேசினார் எனும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வழக்கில் நீதித்துறை நடுவரிடமே ஒரு காவலர் இவ்வளவு அதிகாரத்திமிரோடு பேசுகிறாரென்றால் யார் தந்த துணிவு இது? இதுதான் முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் காவல்துறை, மாண்புமிகு நீதித்துறையை‌ மதிக்கிற இலட்சணமா? முதல்வர் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருக்கிறதா?

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

Translation:

Sathankulam Killings! Seeman Questions TN Govt.

When the whole country outcry in oneness over the homicide of the Santhankulam traders of Thoothukudi district — father-son duo — Jayaraj and Bennicks — to arrest the two policemen under murder case, the alleged perpetrators, why the TN Government has been neglecting the feelings of the entire public by not even filing a lawsuit against them? What is the background of the TN Government’s assistance in saving the killers by depicting the mere transfer to the armed forces wing and later suspending them to perform their duty, after huge hue and cry, as the maximum legal measure? Why is the TN Chief Minister more compassionate towards the killers than the victim’s family?

Why should the TN Government refuse to pay heed to their most legitimate demand that the killers be punished to ensure that not another family is put in a similarly miserable condition, even when Jayaraj’s family is in a state of total despair and helplessness? If so, is the TN Government trying to justify their deaths? Does the financial assistance given to their families amount to the same as those lives?

Why did the Chief Minister Edappadi Pazhanisamy make a hasty statement that the two men died of prevailing illness before the postmortem was completed? On what basis did the CM come to the conclusion of their death? Isn’t his statement preceding the physical analysis report an open breach of authority?

If it is true that the police claim that ‘the body was injured because Bennicks rolled down the ground,’ why did the two policemen were transferred to the armed forces? Why did the family of Jayaraj who died announced a sum of Rs 20 lakh? Is it not treason ousting by disguise?

The police said in the FIR that they had been ‘standing in front of the shop’, ‘arguing’, ‘injury due rolling down the ground’, ‘fell down and injured while getting into the vehicle’ and ‘both were taken in one vehicle’. All these reports in the FIR were fabricated, which is quite evident by the CCTV footage. If they kept open the shop more stipulated time, they could have imposed a fine or sealed the shop; why were they arrested and taken to the police station? Why should they be tortured for hours and succumbed to death eventually?

If someone is arrested based on certain charges, it is the responsibility of the police department to put them under trial court and ultimately in prison, if found guilty; instead, why should a 31-year-old youth be beaten to death in a single day? What was the need for the police to act inhumanely cruel and brutal by inserting a lathi into the anus of these innocent persons who have not done any wrongdoing? Does the TN Government accept this?

Why did the doctor conceal the injuries in his certificate of physical examination that was conducted before they were imprisoned? What action has been taken against the doctor? Why did the judge not allowed to release them on personal bail, who have no criminal background and who have been arrested for violations?

Why was the judge ordered the two men with bloodshed and wounds due to the police brutal attack? Did he gave orders without seeing them in person? What action has been taken against him? The prison report on the health checkup that was conducted before they were imprisoned has stated that both of them had a back bruise and were bleeding, and swelling of the hands and feet were noted? How did the prison department allow the two men to be jailed who were badly injured? What action was taken against the jail officer? What was the politics behind that?

Why they were lodged in the remote Kovilpatti Sub Jail that takes two hours to reach, when there are Sathankulam Prison and Sub Jail situated close by? What is the connection between the Kovilpatti Sub Jail and the Sathankulam Police? When there is a rule that even while former chief minister is arrested, he/she should be taken to jail only in police vehicles, why should Jayaraj and his associates were made to bring their own vehicles and were taken to jail in the same? What is the need for it?

Even when one put forth his/her side’s fair points, the police rampantly questions “Are you speaking legality to the police?”, with vengeance files false cases, make the public to wander unnecessarily. Why did the TN Government not try to stop these acts of abusive power violations? Is it a crime to speak law? No! Are the police beyond the law? Why has the TN Government not yet condemned the atrocity of the police who broke the hands of those arrested and unraveled the myth in front of the judge that ‘they slipped in the toilet? Is it not the sathankulam brutal killings an extension of such incidences?

Why should the case be transferred to the Central Bureau of Investigation (CBI) as a whole, not to register a case of murder against the police even if all the statements of the police in the FIR have been proved false? Does the TN Government not trust the police?  Has the CM lost credibility with the police who is under his control?

Why there is no legal action taken against the alleged perpetrators of the Massacre of Thoothukudi Firing incident that took place more than two years? Is the TN Government trying to shy away from registering a case and put this incident on hold by moving it to the CBI in a similar way how the Thoothukudi Shooting Massacre was put on hold by appointing a one man commission under the Retd. Judge, Aruna Jagadesan?

The news of foul language used by a lower-ranked policeman on the judicial magistrate was shocking who went to the police station to inquire into the Sathankulam brutal killings. Who was behind this policeman to boldly speak in this fashion to the judicial magistrate? Is this the way of respecting the hon’ ble judiciary system by the police that the Chief Minister is control of? Is the police under the control of the CM?

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு
அடுத்த செய்திபுதுவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கலந்தாய்வு கூட்டம்- கடலூர் புதுச்சேரி