20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்! – சீமான் அதிரடி

82

20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்! – சீமான் அதிரடி

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்கிறார் உலகப்பொது மறையோன் வள்ளுவப் பெருமகனார்.

இயற்றலோ, ஈட்டலோ, காத்தலோ, வகுத்தலோ என ஏதும் செய்ய இயலாத நிலையில் நிர்வாகத்திறனும், பொருளாதார மேலாண்மையுமற்று நிற்கும் மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாய்ச் சூறையாடிவிட்டு இப்போது வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முனைவது வேடிக்கையானது.

1. நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 20 இலட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். நாட்டின் மொத்த ஆண்டு பட்ஜெட்டே 30 இலட்சம் கோடிகள் தாண்டாத நிலையில் 3ல் 2 பங்கு 20 இலட்சம் கோடிக்குத் திட்டம் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்ற? உத்தரவையும், ஊரடங்கு அறிவிப்பையும் தவிர வேறு எதனையும் சரிவரச் செய்யாத மத்திய அரசு, மாநிலங்கள் கோரிக்கை வைத்த பேரிடர் கால நிதியைக்கூடத் தராது இழுத்தடித்து வரும் நிலையில் 20 இலட்சம் கோடிக்கான திட்டங்கள் மட்டும் எவ்வாறு இருந்துவிடப் போகிறது? இந்த 2 நாள் அறிவிப்புகளிலும் ஏமாற்றம் தவிர வேறன்ன இருக்கிறது?

2. ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ எனும் திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி மூலம் 20 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுமென்றால், விதை நெல் போல ரிசர்வ் வங்கியிலிருந்த உபரி நிதியான ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடியில் கை வைக்க வேண்டிய தேவையென்ன?

3. பொருளாதாரத்தைச் சீர்செய்கிறோம் என்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ற அரசு, இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்ற அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் கலால் வரியை காரணங்காட்டி எரிபொருள் விலையை உயர்த்திய அரசு இன்றைக்கு அறிவித்திருக்கும் 20 இலட்சம் கோடி ரூபாய் எதன் மூலம் வந்ததென்று வெள்ளை அறிக்கை வெளியிடுமா?

4. நாடு முழுமைக்கும் ஒரே நாளில் ஊரடங்கை அறிவித்து மொத்த நாட்டையும் ஒற்றை இரவில் முடக்கிய பிரதமர் மோடி, அமைப்புசாரா தொழிலாளர்களாக விளங்கும் 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்களின் பசி, பட்டினியைப் போக்க வாழ்வாதார உறுதிப்படுத்தல் போன்றவைகளுக்கு ஒதுக்கியது வெறும் 3500 கோடிக்கு மதிப்பிலான உணவு தானியங்கள் மட்டுமே. அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 8 கோடி மட்டுமே என்று அறிவித்துளளது ஏன்?

5. நாடு முழுமைக்கும் வறுமையைப் போக்க பணிநிமித்தமாக இடம்பெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடம் திரும்ப வசதியோ, 50 நாட்களுக்கு மேலாக அவர்களின் வயிற்றுப்பசி போக்க உணவோ இடாது நடந்தே பயணப்படச்செய்து சாகவிட்ட அரசு இன்றைக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவைக்கத் திட்டங்கள் அறிவிக்கிறதென்றால் யாருடைய நலனுக்காகத் திட்டங்கள் தீட்டப்படுகிறது?

6. 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டப்படுமென்றால், இப்பேரிடர் காலத்திலும் சுங்கச்சாவடிகளைத் திறந்துவிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகைச் செய்தது ஏன்?

7. ஊரடங்குக் காலத்தில் வாழ்வாதாரமின்றிக் குடும்ப வறுமையைப் போக்க வழிதெரியா நிலையில் உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பங்களின் நிலைகுறித்து இதுவரை வாய்திறக்காத பிரதமர் மோடி அறிவித்த 20 இலட்சம் கோடி மதிப்பீட்டுத் திட்டங்களில் இதுவரை அறிவித்தவை எல்லாம் கடனுதவி, பிணையில்லா கடன், வட்டியில்லா கடன், வட்டி தள்ளுபடி, கடன் அடைப்பு ஒத்திவைத்தல் என்று எல்லாமே கடனுதவி சார்ந்த திட்டங்கள் தான். சிறு குறு தொழிற்சாலைகள், விவசாயிகள், மீனவர்கள், நடைபாதை வணிகர்கள் முதல் மின்சார நிறுவனங்கள் வரை இந்த அரசு நீட்டித்திருப்பது கடன்கள் தான் உதவி அல்ல. இப்படியான நெருக்கடி நேரத்திலும் அரசு மக்களுக்குக் கடன் தான் தருமா? நிதி உதவி தராதா?.

8. ‘மேக் இன் இந்தியா’ எனும் பெயரில் வாடகைத்தாய்மார் முறை பொருளாதாரக் கொள்கைக்குச் சந்தையைத் திறந்துவிட்டு அந்நிய நாடுகள் இந்நாட்டின் வளத்தில் பொருளீட்டி இலாபமடைந்து செல்கையில் இப்போது ‘தற்சார்பு’ எனத் திருவாய் மலர்ந்திருக்கும் பிரதமர் மோடி இனியாவது அந்நிய நாட்டு நிறுவனங்களையும், தனிப்பெரு முதலாளிகளையும் வளர்த்துவிடுவதை நிறுத்த முனைவாரா?

9. நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் சிக்கித் தவிக்கும் இக்காலக்கட்டத்திலும் தனிப்பெரு முதலாளிகளின் 68,000 கோடியை வாரக்கடனாகத் தள்ளுபடி செய்தது ஏன்? கல்விக்கடனையும் விவசாயக்கடனையும் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொல்லும் பிரதமர் மோடி இனியாவது வாராக்கடன்களை வசூலிக்க கறார் தன்மையோடு இருப்பாரா? இல்லை! வாய்வீச்சிலேயே வாள்வீச முனைவாரா?

10. கொரோனா நோய்த்தொற்றுத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு ரூபாய்கூட இழப்பீடு அறிவிக்காத மத்திய அரசு, இன்று 20 இலட்சம் கோடி அறிவிப்புகள் என்பதெல்லாம் வெற்று அறிவுப்புகளின்றி வேறன்ன?

11. ஊரடங்குக்காலத்தில் வாழ்விடம் திரும்ப விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொடர்வண்டி பயணக்கட்டணத்தைக்கூட ஏற்க மறுத்த மத்திய அரசு, அவர்களுக்கான உணவு தானியங்களை, பொது விநியோக முறையில் எங்கு வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற பெயரில் அவர்களைக் காரணங்காட்டி மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் மக்கள் விரோத “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை இந்த இக்கட்டான காலத்திலும் திணிக்க முயல்வதற்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?

12. ‘விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்குவோம்.; குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வோம்’ என எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்று அவற்றைச் செயல்படுத்தப் போவதாகத் தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதியையே காப்பாற்ற முனையாத மத்திய அரசு, அவர்களை மேலும் கடனாளிகளாக்க முயல்வது என்னவகை நியாயம்?

13. சிறு, குறு தொழில்களைப் பணமதிப்பிழப்பாலும், சரக்கு மற்றும் சேவை வரியாலும் முடக்கிப் போட்டு ஒற்றைச் சந்தையைத் தனிப்பெரு முதலாளிகளுக்காகத் திறந்துவிட்ட மத்திய அரசு இப்போது ‘தற்சார்பு’ எனக் கூவுவது வேடிக்கையானதில்லையா?

14. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கை நிறைவுசெய்யும் வேளாண்மைக்கெதிராகத் திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் வகுத்துவிட்டுத் தற்சார்பை மீட்டெடுப்பதாக நீட்டி முழக்குவதெல்லாம் வாய்ச்சவடால் இல்லையா?

15. ‘கிராமங்களே இந்தியாவின் உயிர்நாடி’ எனும் முழக்கத்தை முன்வைத்த அண்ணல் காந்தியடிகளின் வழிநின்ற கிராமியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பாவின் எக்கூற்றையும் செயல்படுத்த முன்வராத மத்திய அரசு, கிராமப்புற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்முயற்சி செய்ய முன்வராத மத்திய அரசுதான் தற்சார்பை முன்னெடுக்கப் போகிறதா?

16. உள்நாட்டில் விளைந்த நெல்லும், கரும்பும் விலையில்லாதிருக்க, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்யாத மத்திய அரசு, ‘உள்நாட்டுப் பொருட்களை வளர்த்தெடுக்கப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்து இல்லையா?

17. கொரோனா தடுப்புப்பணிகள் முதல் ஊரடங்கு வரை யாவற்றையும் மாநிலங்களே செய்கையில் அவர்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து வழிகாட்டுவதை விடுத்து, அதிகாரக்குவிப்பிலும், நிதிப்பங்கீட்டிலும் எதேச்சதிகாரப்போக்கோடு செயல்படும் மத்திய அரசு 20 இலட்சம் கோடியை ஒதுக்கீடு செய்வேன் என்று சொல்லி இதிலும் கைவிரித்து விட்டது. மாநிலங்கள் கேட்ட நிவாரண நிதி எங்கே?

18. ‘மேகத்தைக் கொண்டு ரேடாரை மறைத்தது’ போல, கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு மீது மாநில அரசுகளுக்கும், பொது மக்களுக்கும் நாடு முழுமைக்கும் ஏற்பட்டிருக்கிற கொதிநிலையை மறைக்கத்தானா 20 இலட்சம் கோடியென வாயிலே வருவதையெல்லாம் வருவாய் கணக்கீடாகக் காட்ட முனைகிறதா?

19. ’80 கோடி குடும்பங்களுக்குப் பொது விநியோக திட்டம் மூலம் பொருட்கள் விநியோகம்’ செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. மொத்த இந்திய மக்கள்தொகையே 135 கோடி தான். சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மூவர் என்று வைத்துக்கொண்டால் இந்தியாவின் மக்கள் தொகை  கோடி வருகிறது. ஆக அதுவும் பிழை! பொய்! இப்படித் தான் இருக்கிறது இவர்களது அறிவிப்புகள்.

கடைசியாக,

20. ’15 இலட்சம் வங்கியில் வரவு வைக்கப்படும்’ எனத் தேர்தல் பரப்புரையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, ‘எலக்ஷன் ஜூம்லா’ என ஆட்சியமைத்தவுடன் கூறி ஒதுங்கிக் கொண்ட பிரதமர் மோடியின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை போல இதுவும், கொரோனா காலத்தில் சொல்லப்படும் ‘ஜூம்லா’ தானா?

ஐயா நியாயமார்களே!
உங்கள் வார்த்தைகளில் ‘இனிப்பு’ என்று சொல்லி சொல்லி எங்கள் வாயும் வாழ்க்கையும் கசந்தது போதும்!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! – சீமான் கோரிக்கை