ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! – சீமான் கோரிக்கை

117

அறிக்கை: பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துவரும் தமிழக அரசு ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி

கொரோனா நுண்மி நோய்ப்பரவல் காரணமாக கடந்த இருமாத காலமாக தொடரும் அரசின் ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அனைத்து வகையான தொழில்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு மேலும் சில காலம் தொடரும் என்ற மறைமுக அறிவிப்பால் மக்கள் மேலும் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட பல்வேறு நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச நிவாரணத்தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லையென்றாலும் ஊரடங்கு காலத்தில் சிறு உதவியாக இருந்தது. ஆனால் ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எந்தவித நலவாரியத்திலும் உறுப்பினராக இல்லாத காரணத்தினால் அரசின் உதவித்தொகை உள்ளிட்ட எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.

விழா நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் மட்டுமே தொழில்வாய்ப்புகளை பெறும் இத்தகு கலைஞர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பொருளீட்டும் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ மூன்று இலட்சம்பேர் ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களாக, ஒளிப்பட வடிவமைப்பாளர்களாக, காணொளித் தொகுப்பாளர்களாக, ஒளிப்பட அச்சக தொழிலாளர்களாக உள்ளனர். தங்களுக்கென்று தனியாக நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கை இதுவரை அரசினால் ஏற்கபடவில்லை.
இதனால் பேரிடர் காலங்களில் அரசின் நிவாரணத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித உரிமைகளையும் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

தமிழக அரசு தற்போது விடுபட்ட பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து நிவாரணத் தொகையினையும், உதவிகளையும் அறிவித்துவரும் வேளையில் அத்தகைய உதவிகளை ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கென்று தனியாக ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்கள் நலவாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்தி20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்! – சீமான் அதிரடி
அடுத்த செய்திஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்