மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல்

31

டெல்லி நிஜாமுதீனிலுள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனோ நோய்த்தொற்று பரவியது என்பது எதேச்சையானது; கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால், அதற்கு மதச்சாயம் பூசி, இந்நெருக்கடிக் காலக்கட்டத்திலும் மதத்துவேசம் பேசி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத்தன்மையற்றது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த மத்திய அரசே தனது ஆளுகைக்குட்பட்டிருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடவிட்டு வீதியில் நடந்தே பயணப்பட வைத்து சமூக விலகலை தகர்த்ததும், ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசே முன்நின்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதும்தான் நாட்டைப் பிளக்கும் கொடிய மதவாத அரசியல். அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இத்தருணத்திலாவது கைவிட்டு மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன் “உங்களிடமிருக்கும் இரக்ககுணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்தத் தொடங்குங்கள், இருந்தால் அதை செயல்படுத்திக்காட்டுங்கள்”.


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக!