குவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்- சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் தனது நாட்டிற்குள் பணிபுரியும் அயல்நாட்டு பணியாளர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என முடிவு செய்துள்ளது. அதன்படி பணி உரிமத்திற்கான காலக்கெடு முடிகைக்குப் பிறகோ அல்லது அதிக வேலை பளு, சம்பளக்குறைவு , இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் உரிமம் பெற்ற இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களிலோ சட்டத்திற்குப் புறம்பாக மறைந்து பணிபுரியும் பணியாளர்களுக்கு எவ்வித தண்டனையும் தராமல் பொதுமன்னிப்பு கொடுத்து அவரவர் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்தப் பொது மன்னிப்பு ஆணை செயற்பாட்டில் இருக்கும். குவைத் நாட்டில் நூற்றுக்கான தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 40,000 பேர் இவ்வாறு முறையான அனுமதி இல்லாமல் பணிபுரிகின்றனர். எனவே குவைத் அரசின் பொதுமன்னிப்பு கால எல்லைக்குள் அங்கே சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு கொண்டுவர இதுவே நல்ல தருணம் .
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொதுமன்னிப்பிற்கான விண்ணப்ப படிவம் தரப்படுகிறது. இதற்குக் கட்டணமாக 5 குவைத் தினார்களைச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது இந்திய தூதரகம். இவ்வாறு முறையான உரிமம் இன்றிப் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் வீட்டு வேலை உள்ளிட்ட குறைவான சம்பளத்திற்குப் பணிபுரியும் கூலித்தொழிலார்களே. தற்போது செயல்பாட்டில் உள்ள கொரோனா ஊரடங்கு காரணாமாக அவர்கள் மேலும் பொருளதார சிக்கலில் சிக்கி உள்ளனர்.
எனவே பொதுமன்னிப்புப் படிவம் பெறுவதற்கான கட்டணத்தை நீக்கவும், பொதுமன்னிப்புப் பெற்ற தமிழர்களைச் சிறப்பு விமானம் மூலம் குவைத்திலிருந்து தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வரவும் தமிழக அரசு மத்திய அரசின் வெளியுறத்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.