முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்! – சீமான் கண்டனம்

43

அறிக்கை: முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

இந்தியாவின் சனநாயகத்தைக் கட்டிக்காக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகச் செயல்பட்டு ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்நாள் சனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திர தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய கருப்பு நாள்!

சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் எதேச்சதிகாரப்போக்கோடு செயல்படும்போதெல்லாம் மக்களின் குரலாகவும், சட்டத்தை நிலைநாட்டும் அரணாகவும் விளங்குபவை நீதிமன்றங்கள். அவற்றின் தன்னாட்சியுரிமையே இந்தியாவின் சனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்கிறது. அத்தகைய நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் குலைத்து, மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிற இச்செயல் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கிற பெரும் இழுக்காகும்.

பதவியிலிருந்து இறங்கியதும் ஆளும் அரசால் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஆளுநர் பதவிகளும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் அவர்கள் நீதியரசர்களாக இருந்த பொழுது வழங்கப்பட்ட நீதியை கேள்விக்குறியாக்குகிறது. ஓய்வுபெற்ற பின் இப்பதவிகளைப் பெறுவதற்காக நீதிபதிகள் இனி அரசின் ஊதுகுழலாக மாற இந்த நியமனம் கேடான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. இதன்மூலம் சனநாயகத்தின் அடித்தளமாக இருக்கிற நீதித்துறை‌யும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் தன்வயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பேராபத்தை உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெருங்கனவே எளியவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் மக்களாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்பது தான்! அதனை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக நீதித்துறையின் மாண்பையும், சார்பற்ற தன்மையையும் அதளபாதாளத்தில் குழிதோண்டிப் புதைத்த இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா -நாமக்கல் சட்டமன்ற தொகுதி