கொரோனா வைரஸ் பரவுவது எப்படி? தற்காத்துக்கொள்வது எப்படி? | சுற்றுச்சூழல் பாசறை

185

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளில் இதுவரை 62 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகிலுள்ள 118 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்நோயால் சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேருக்கும், பிற நாடுகளில் 38 ஆயிரம் பேருக்கும் இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இதுவரை சீனாவில் 3100 நபர்களுக்கு மேலும், பிற நாடுகளில் 1100 பேருக்கு மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த கவலை அளிக்கின்ற இவ்வேளையில், சீனாவில் இதன் தாக்கம் குறையத்தொடங்கியும், இந்தியா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்தும் வருவது மக்களிடம் இந்நோய் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு மட்டுமன்றி, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற எல்லா நாடுகளும் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிற இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடும், உலகின் மோசமான பொது சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றானதுமான இந்திய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகமும், தமிழக அரசும் தொடக்கம் முதலே இந்தப் பிரச்சனையை அணுகுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான கேரளாவிலும், தெலுங்கானாவிலும், நாட்டின் தலைநகரான டெல்லியிலும் இதன் பாதிப்பு முன்கூட்டியே உணரப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து எந்தவித உடனடி தற்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பது போல் தெரியவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் இந்நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அவசரகால நடைமுறைகளாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளை இது குறித்து அதிகக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தவும், தற்போது சென்னையில் மட்டுமே உள்ள இந்த நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களை மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உடனடியாக ஏற்படுத்திடுமாறும், இந்த நோய் மற்றும் அதன் தாக்கம் குறி்த்தத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி மக்கள் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்க உதவுமாறும், நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநில எல்லைகளிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை, கட்டாய பரிசோதனைகளை மேற்கொண்டு தமிழகத்தில் மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்டோர் உள் நுழைந்து பிறருக்கும் பரப்பாமல் தடுக்க தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கோருகிறோம்.

கொரானா வைரஸ் என்றால் என்ன?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

வூகானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது.

விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், வூகானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது.  வூகான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது எப்படி?

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாகப் பரவுவதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும்.

என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமல் உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

மருந்து இருக்கிறதா?
கொரோனா வைரஸைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுப்பதே தற்போது முதன்மை நோக்கமாக இருக்கிறது. எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து, அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்படி தற்காத்துக்கொள்வது?
வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகியவை தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ளுங்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் உறுதிபடுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம், பிறருக்கும் பகிர வேண்டாம்.

1.இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மூக்கு – வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது.

3.சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

4.கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

5. கிருமி நாசினி அல்லது சோப்பால் அடிக்கடி கைகளைக் கழுவுதல், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

6. தேவையின்றி வாய், கண்கள், மூக்கு இவற்றைக் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்.

6. இருமல், தும்மலின் போது மூக்கு-வாயைத் துணியால் மூடிக்கொள்வதும் அவசியம்; இவ்வாறு பயன்படுத்தியத் துணிகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாகத் தூக்கியெறிவது நல்லது.

7. சளி, தும்மல், இருமல் உள்ளோரிடமிருத்து குறைந்தது 3 அடி இடைவெளி விட்டு நிற்கவும்; உரையாடவும்.

8.சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாடி பரிசோதனை செய்து கொள்வது, அதற்கான உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது உங்களைக் காப்பதோடு பிறரையும் இந்நோய் பரவுவதிலிருந்து காக்கும்.

9. மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பதோடு, தேவையற்ற பயணங்களையும் தவிர்ப்பது இந்நோய்த் தொற்றிலிருந்து காக்க உதவும்.

10. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை இந்நோய் எளிதில் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

சுற்றுச் சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி